×

தமிழக மீனவர்கள் கைதுக்கு கண்டனம் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 55 தமிழக மீனவர்களை, கச்சத்தீவு அருகேயுள்ள நெடுந்தீவில் இலங்கை கடற்படையினர் சிறைப்படுத்தி, அவர்களது 8 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை ஜனவரி 3ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்ற உத்தரவின்படி, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாக எழும் பிரச்னைகளின் தன்மை காலங்காலமாக மாறாமல் நீடிப்பது வேதனையளிக்கிறது. ஒன்றிய அரசு, உடனடியாக இலங்கை சிறையில் அடைபட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்ப வாழ்வாதார தேவைக்கு உதவ வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் இன்னலுக்கு உள்ளாகும் இந்த அவலநிலைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வை ஏற்படுத்தி இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தமிழக மீனவர்கள் கைதுக்கு கண்டனம் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Saradkumar ,Chennai ,Sri Lankan Navy ,Saratkumar ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...