×
Saravana Stores

தமிழகத்தில் வெறுப்பை விதைத்து வருகிறார்; அண்ணாமலை மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் அதிமுக புகார்: டாக்டர் சரவணன் சரமாரி குற்றச்சாட்டு

மதுரை: தமிழகத்தில் அவதூறாக பேசி வெறுப்பை விதைத்து வரும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை போலீஸ் கமிஷனரிடம், அதிமுக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சரவணன் புகார் தெரிவித்துள்ளார். அதிமுக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதனை இன்று காலை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அதில், அதிமுகவையும், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அசிங்கப்படுத்தும் நோக்கோடும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அவமானப்படுத்தும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆக.25ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். கெட்ட எண்ணத்துடன், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே, அண்ணாமலை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அதன்பின் டாக்டர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மட்டுமே இடம் உள்ளது. பாஜக என்பது மழை பெய்தவுடன் முளைக்கும் காளான் போன்றது. அண்ணாமலை பச்சை பச்சையாய் வீடியோ எடுத்தவர். பாஜ என்பது வீடியோ கட்சி. அண்ணாமலை அரசியல் வியாபாரி. அதிமுக கூட்டணியில் இருக்கும்போது அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி பேசினார்.

தற்போது தனிநபர் விமர்சனம் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அதிமுக தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக ஆன்லைன் புகார் அளிக்க உள்ளனர். அண்ணாமலை தரம் கெட்ட அரசியல் வியாபாரியாக செயல்பட்டு, தமிழகத்தில் வெறுப்பை விதைத்து வருகிறார். பாஜவின் மூத்த நிர்வாகிகள் நல்ல அரசியல் செய்தனர். அண்ணாமலை நாக்கை அடக்க வேண்டும், இல்லையெனில் நாக்கு அழுகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழகத்தில் வெறுப்பை விதைத்து வருகிறார்; அண்ணாமலை மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் அதிமுக புகார்: டாக்டர் சரவணன் சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,AIADMK ,Madurai Police ,Commissioner ,Annamalai ,Dr. ,Saravanan ,Madurai ,AIADMK Medical Team ,Madurai Police Commissioner ,State ,Dinakaran ,
× RELATED அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை!