×
Saravana Stores

இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவைப் பராமரிப்பதே: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

சென்னை: “இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவைப் பராமரிப்பதே! மதச்சார்புப் பிரச்சாரத்திற்கானதல்ல! தமிழில் வழிபாடு – கருவறையில் சமத்துவம் என்ற முதலமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கதே!”என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத பிரச்சாரத்திற்கானதல்ல. கருவறையில் மனிதருக்குள் பேதமற்ற நிலை, தமிழ் மொழியில் வழிபாடு என்ற முதலமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ பழனியில் 24.8.2024 அன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றுள்ளது. காணொலிக் காட்சி வழியாக மாநாட்டைத் தொடங்கி வைத்து வாழ்த்தி உரையாற்றியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்டதுதான் இந்து அறநிலையத் துறை இந்து அறநிலையத் துறை என்பது நீதிக்கட்சி பானகல் அரசரின் ஆட்சியில் பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே உருவாக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டதாகும்.

தமிழ் மன்னர்களின் செல்வத்தாலும், தமிழினத் தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவாக்கப்பட்ட கோவில்கள் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடாரமாகவே இருந்தது. நாம் இதைச் சொல்லவில்லை; இந்திய அரசால் சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் அமைந்த குழுவினரே விலாவாரியாகத் தோலுரித்துக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் இந்து அறநிலையத் துறை என்பது கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதும், வரவு – செலவுகளை சரி பார்ப்பதுமான துறையே தவிர, பக்தியைப் பரப்புவதற்கான ஒன்றல்ல. இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்.
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இந்து அறநிலையத் துறை திரு.நாவலர் இரா.நெடுஞ்செழியன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிதம்பரம் நடராசர் கோவிலில் அறநிலையத் துறை அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் நடந்துகொண்ட முன்மாதிரி (precedent) அந்த நிலையில் சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சென்ற நிலையில், அவருக்குப் ‘‘பிரசாதங்கள்’’ எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் ஒன்றும் அதனை நெற்றியில் பூசிக்கொள்ளவில்லை. பரிவட்டம் கட்டினார்கள்.

தந்தை பெரியாரின் பாராட்டு!
இதுகுறித்து தந்தை பெரியார் அவர்களே ‘விடுதலை‘யில் (25.3.1967, பக்கம் 2) தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். ‘‘அங்கே போய் அமைச்சர் நெடுஞ்செழியன் சாமி கும்பிடவில்லை. ‘‘பிரசாதம்’’ வாங்கி அணிந்துகொள்ளவில்லை. தலையில் கட்டிய பரிவட்டத்தை எடுத்து, கழுத்தில் வேட்டிபோல் போட்டுக் கொண்டார்.’’ ‘‘ஒரு வெள்ளைக்காரன் இங்கு கோவிலுக்கு வந்துவிட்டு எப்படிப் போவானோ, அப்படித்தான் நானும் வந்துவிட்டுப் போவேன்‘‘ என்றாராம்.

நெடுஞ்செழியன் , ‘‘நாங்கள் கொள்கைகளைக் கழுவிக் கொட்டிவிட்டு இங்கு வரவில்லை. குளிக்கப் போகும்போது, வேஷ்டியை அவிழ்த்து மேடையில் வைத்துவிட்டு, குளிக்கப் போய் அழுக்கை தேய்த்துக் கழுவிவிட்டு, மேடையில் ஏறியவுடன், அந்த வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்வதுபோல, அந்தக் கொள்கையோடுதான் இருக்கிறோம்’’ என்று காட்டிக் கொண்டார் என்றுதான் மக்கள் கருதவேண்டும்.

(தி.மு.க.காரர்கள்) அதாவது ‘திராவிட’ என்ற சொல்லை நீக்கிக் கொள்ளும் வரையில், கொடியில் சிவப்பு பாதி, கருப்பு பாதிஎன்பதை மாற்றிக் கொள்கின்ற வரையில், அவர்களது சமுதாய சம்பந்தமான கொள்கை மாறாது என்பதை மக்கள் நம்பலாம் என்றே கருதுகிறேன்’’ (‘விடுதலை’, 25.3.1967) என்று தந்தை பெரியார், ‘‘மந்திரியும், அறநிலையப் பாதுகாப்பு இலாகாவும்’’ என்ற தலைப்பில் எழுதிய தலையங்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். 16.4.1967 ‘விடுதலை‘யின் முதல் பக்கத்தில், ‘‘பலே நெடுஞ்செழியன்! பலே பலே நெடுஞ்செழியன்’’ என்ற தலைப்பிட்டு, கையெழுத்திட்டு, பாராட்டியும் எழுதினார்.

ஈரோட்டில் தேவஸ்தான கமிட்டி தலைவராக இருந்தவர்தான் தந்தை பெரியார்!
தந்தை பெரியார் அவர்களே கூட ஈரோட்டில் தேவஸ்தான கமிட்டி தலைவராக இருந்து, கோவில் வருவாயைப் பெருக்கிக்காட்டி, காங்கிரசில் சேரும்போது, 29 பதவிகளை உதறித் தள்ளியதில், இந்தப் பதவியும் அடங்கும்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாகவேண்டும். சிதம்பரம் நடராசன் கோவிலுக்குச் சென்று, வெளியே வந்தபோது, செய்தியாளர்களிடம் அமைச்சர் நெடுஞ்செழியன் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானதாகும்.

அறநிலையத் துறை அமைச்சரின் பணி என்பது என்ன?
‘‘அறநிலையத் துறை அமைச்சரின் பணி என்பது ஆறு மரக்கால் அரிசி என்றால், அதை அளவுப்படி சரியாகப் போடுகிறார்களா என்று பார்ப்பதுதானே தவிர, சாமி கும்பிடுவதோ, ஆன்மிகப் பிரச்சாரம் செய்வதோ அல்ல’’ என்று பளிச்சென்று சொன்னதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.
பாராட்டவேண்டிய நேரத்தில் மனந்திறந்து பாராட்டுவது போலவே, சறுக்கல் நேரும் நேரத்தில் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் முக்கிய கடமையாகும்.

முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்
அனைத்துலக முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில் 8 மற்றும் 12 ஆவது தீர்மானங்கள் விமர்சனத்துக்கு உரியவையாகும்.

8 ஆவது தீர்மானம்:
‘‘கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.’’

12 ஆவது தீர்மானம்:
‘‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.’’
இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?

இந்து அறநிலையத் துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச் சார்புடையன அல்ல!
நமது தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே!
தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் – இதற்குமேல் விளக்கத் தேவையில்லை.

அரசின் கொள்கை மதச்சார்பின்மையே!
முதலமைச்சர் காணொலி உரையில் முடிவாக ஒன்றை அழுத்தமாகக் குறிப்பி்ட்டுள்ளார்.
‘‘ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும்! திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும்! உலகம் ஒன்றாகும்.’’ (‘முரசொலி’, 25.8.2024, பக்கம் 4).
இது முத்தாய்ப்பான கொள்கை ரீதியான முத்திரையடியாகும். அந்த வகையில், மாநாடு நடைபெற்ற முருகன் கோவிலிலேயே தொடங்குவது பொருத்தமானதாக இருக்க முடியும். தமிழிலும் அர்ச்சனை என்ற உம்மை இழிவு சிறப்பை நீக்கி, தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும்.

கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற ‘திராவிட மாடல்’ அரசின் மனிதத்துவ சிந்தனையை செயல்படுத்தவேண்டும். இது ஒரு கட்டத்தோடு நின்றிருக்கிறது. இதனை முழுமையாக நிறைவேற்றி, முதலமைச்சர் காணொலியில் குறிப்பிட்ட, கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிறைவேற்றப்படவேண்டும்.

பழனிக் கோவிலின் உண்மை வரலாறு என்ன?
இந்தப் பழனிக் கோவிலை எடுத்துக் கொண்டாலே, இதன் பூர்வீக வரலாறு என்ன?
இந்தக் கோவிலை உருவாக்கியவர் யார்? பூசாரிகளாக (அர்ச்சகர்களாக) இருந்தவர்கள் யார்? இப்பொழுது பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருப்பதன் பின்னணி சூழ்ச்சி என்ன என்பது முக்கியமானதாகும்.
சித்தர்கள் பதினெண்மரில் போகர் என்பவரும் ஒருவர். திருமூலரின் வழிவந்தவர். திருமூலரின் சீடர் காலங்கநாதர், அவரது சீடரே போகர் ஆவார். இந்த சித்தர்கள் ஜாதி, மதங்களைக் கடந்தவர்கள்; இன்னும் சொல்லப்போனால், அவற்றைக் கடுமையாக எதிர்ப்பவர்கள்.
‘‘கல்லினால் அமைக்காமல் ஒன்பது வகை மருந்து சரக்குகளால் – அதாவது நவபாஷாணத்தினால் போகரால் நிறுவப்பட்டதுதான் பழனி முருகன் சிலை.’’ இன்றைக்கும் கோவிலின் உட்புறம் உள்ள திருச்சுற்றில் சித்தரான போகர் சமாதி உள்ளது.

போகர் வழிவந்தவர்கள்தானே பூசை செய்து வந்தனர்
போகருக்குப் பின்னர், அவர்தம் சீடர் புலிப்பாணியாராலும், அவருக்குப் பின்னரும், புலிபாணியாரின் வழிவந்த சீடர்களாலும் பூசை முதலியன நடைபெற்று வந்தன.

பழனிக் கோவில் அர்ச்சகர்களாக பார்ப்பனர்கள் வந்தது எப்படி?
கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையினை திருமலை நாயக்கர் என்பான் ஆட்சி செய்து வந்தான். பொதுவாகவே நாயக்க மன்னர்கள் அனைவரும் பார்ப்பனர்களின் அடிமைகளாகவும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கும், ஏற்றத்திற்கும் அவர்களின் ஸநாதன தர்மத்திற்கும் ஆதரவு காட்டியவர்களாகவுமே இருந்து வந்தார்கள். திருமலை நாயக்கனைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை… இவனது ஆட்சியில் பார்ப்பனர்கள் சகல துறைகளிலும் கொடி கட்டிப் பறக்கும் ஆதிக்கம் உச்சக்கட்டமாகவே இருந்தது. திருமலை நாயக்கனுடைய ஆட்சியில் ராமப்பய்யன் என்னும் பார்ப்பனன் தளவாய் ஆக (படைத்தலைவனாக) இருந்தான். இவன் வருணாசிரமத்தினைப் பரப்புவதில் கண்ணும் கருத்துமாக இருந்தவன்.

அவன் ஒரு சமயம் பழனி கோவிலுக்கு வந்தான். பழனி ஆண்டவனை வழிபட விரும்பினான். ஆனால், பழனி ஆண்டவன் கோவிலில் பூசை செய்பவர்கள் பார்ப்பனர் அல்லர். புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என்னும் பார்ப்பனரல்லாத பண்டாரமே பூசை செய்து வருவதைக் கண்டு சினந்தான். பாளையக்காரர்களை அழைத்து வினவினான். பரிகாரம் தேடத் துடித்தான். ‘‘பிராமணனாகிய நான், சூத்திர மரபில் வந்த புலிப்பாணி சாமியார் கையிலா தீர்த்தப் பிரசாதம் வாங்குவது? கூடாது, கூடவே கூடாது. எனவே, நீங்கள் அந்தணனாகிய யான் தீர்த்தப் பிரசாதம் வாங்கிக் கொண்டு பழனியாண்டவரை வணங்கி வழிபட ஆவன செய்தல் வேண்டும். அதற்கு வழிவகை செய்யுங்கள்’’ என்று கர்ச்சித்தான்.

போகர் காலத்தில் இருந்து அவர் வழிவழியாக பூசை செய்து கொண்டு வரும் மரபில் வந்தவர் புலிப்பாணி பாத்திர சாமியார் என்ற போதிலும், நீங்கள் புலிப்பாணியாரிடம் சென்று அவரைப் பழனியாண்டவருக்குப் பூசை செய்யும் உரிமையினை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தி சம்மதிக்கச் செய்யுங்கள் என்று கூறினான்.

பாளையக்காரர்கள் சேனைத் தலைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆயிற்றே! புலிப்பாணியாரை மிரட்டி, கோவில் பூசை செய்யும் உரிமையினை விட்டுக் கொடுக்கச் செய்தனர். சாமியாரும், அரசு கோபத்திற்கும், தண்டனைக்கும் பயந்து வேறு வழியின்றி விட்டுக் கொடுத்துவிட்டார். ராமப்பய்யன் உடனே பாளையக்காரரை அழைத்து கொங்குநாட்டில் இருந்து பார்ப்பன அர்ச்சகர்கள் அய்ந்து பேரை அழைத்து வரச் செய்தான். அப்படி அழைத்து வரப்பட்டவர்கள் கொடுமுடி சரஸ்வதி அய்யன், மரதூர் தம்பாவய்யன், நாட்டார் அய்யன் கோவில் சுப்பய்யன், கரூர் முத்தய்யன், கடம்பர் கோவில் அகிலாண்டய்யன் ஆகியவர்கள் ஆவர்.
ராமப்பய்யன் மேற்கூறிய அய்வரில் கொடுமுடி சரஸ்வதி அய்யனை கோவிலுக்குக் குருக்களாகவும், ஏனைய நால்வரையும் பூசைப் பரிகாரம் நம்பிமார்களாகவும் (பூசை செய்யும்போது குருக்களுக்கு உதவியாக இருப்பவர்கள்) நியமனம் செய்தான்.’’
(ஆதாரம்: ‘‘பழனித்தல வரலாறு‘‘ – ஜே.எம்.சோமசுந்தரம் பிள்ளை பி.ஏ., பி.எல்., அவர்களால் எழுதப்பட்டு, பழனிக் கோவில் தேவஸ்தானத்தால் 1944 இல் பதிக்கப்பட்ட நூலிலிருந்து)

பழனி கோவிலில் மாற்றம் தொடங்கட்டும்!
இந்த உண்மை வரலாற்றின் அடிப்படையில், ‘‘அனைத்து முத்தமிழ் முருகன் மாநாடு’’ நடத்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவது பொருத்தமானதாகும். அதிலும்

தற்போது மிஞ்சியது ஏமாற்றமே!
இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, சிறந்த செயல்வீரர் என்பதால், செயல்பாபு என்றே நம் முதலமைச்சர் பாராட்டினார்.
அதைவிட இப்போது ஒன்றைச் சுட்டிக்காட்டுவதும் அவசியமாகும்.
‘‘கோவில் துறையைப் பாதுகாக்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் இப்போது கோவிலிலேயே குடியிருக்கிறார்! என்று கூறியதன்மூலம், அவர் தனது துறைப் பணிகளில் தேவையான ஆர்வம் தாண்டி செய்கிறார். over enthusiastic ஆக இருக்கவேண்டாம் – கூடாது – இது ‘இடிப்பாரை’ – உள்நோக்கமின்றி!
முக்கியமாக அவரைப் பாராட்ட – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தடை இன்னும் நீங்காது தொடரும் நிலை மாறவேண்டும்.
அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் – நியமனங்கள், புதிய மாணவர் சேர்க்கைகள் போன்ற பணிகளில் அவர் தீவிரம் காட்டவேண்டும் என்று சொல்வது நமது உரிமையாகும்” என தெரிவித்துள்ளார்.

The post இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவைப் பராமரிப்பதே: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : Hindu Charitable Department ,Dravidar Kazhagam ,President ,K. Veeramani ,CHENNAI ,Chief Minister ,Hindu Charitable ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு...