×
Saravana Stores

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் குவிந்திருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகரின் முக்கிய அங்கமாக அமைந்திருக்கிறது வேங்கிக்கால் ஊராட்சி. கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவக் கல்லூரி என மாவட்டத்தின் முக்கியமான அலுவலகங்கள் அனைத்தும் இந்த ஊராட்சி எல்லையில்தான் அமைந்திருக்கிறது.திருவண்ணாமலை நகரையொட்டி அமைந்துள்ள வேங்கிக்கால் ஊராட்சி, மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும், வாக்காளர் எண்ணிக்கையிலும் மிகப்பெரியது. சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, வேங்கிக்கால் ஊராட்சி, திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைந்திருக்கிறது. ஆனாலும், மாநகராட்சி இன்னும் நிர்வாக செயல்வடிவம் பெறாததால், கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வேங்கிக்கால் செயல்படுகிறது.

இந்நிலையில், வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. அதனால், சுகாதார சீர்கேடு பெருகியிருக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர்.குறிப்பாக, ஓம் சக்தி நகர், தென்றல் நகர், வானவில் நகர், பொன்னுசாமி நகர், நேதாஜி நகர், குபேர நகர், தேவராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைகள் குவியல் குவியலாக குவிந்திருக்கின்றன.

தொடர்ந்து பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாதால், சமீபத்தில் பெய்த மழையில் சிதைந்து, சிதறி, அழுகி துர்நாற்றம் வீசுகிறது. ஈக்களும், கொசுக்களும் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வேங்கிக்கால் ஊராட்சிக்கு போதுமான டிராக்டர்கள், குப்பை அகற்றும் நவீன மினி இயந்திரம், மினி டிராக்டர்கள் போன்றவை உள்ளன. ஆனாலும், போதுமான எண்ணிக்கையில் தூய்மைப் பணியாளர்கள் இல்லை. மேலும், வேங்கிக்கால் ஊராட்சியில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு என தனியாக எந்த இடமும் இல்லை.

நகராட்சிக்கு சொந்தமான ஈசான்ய குப்பை கிடங்கை, வேங்கிக்கால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை பயன்படுத்தி வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக நகராட்சி குப்பைக் கிடங்கை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், குப்பைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எனவே, வேங்கிக்கால் ஊராட்சியில் கடந்த சில வாரங்களாக அகற்றப்படாமல், பல்வேறு இடங்களில் குவிந்திருக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் குவிந்திருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Venkikal Panchayat ,Tiruvannamalai ,Government Medical College ,
× RELATED திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டம்...