×
Saravana Stores

கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் கூட்டம் அலைமோதின

*வீடுகளில் குழந்தைகளுக்கு கண்ணன் வேடமிட்டு அசத்தல்

சென்னை : தமிழகம் முழுவதிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் கூட்டம் அலைமோதின. வீடுகளை மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து, குட்டிக் கண்ணனின் பாதம் வரைந்து கண்ணனுக்குப் பிடித்த உணவுப் பண்டங்களைப் படைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

ஆவணிமாதம் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணன் அவதரித்தார் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி நன்னாளில் ஜென்மாஷ்டமி தினத்தை இந்துக்கள் கொண்டாடுகின்றனர். அவர் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் விஷ்ணுவின் 8வது அவதாரமாக கருதப்படுகிறார். இந்த நாளில் பக்தர்கள் விரதம் அனுசரித்து, கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம்.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து வழிபட்டு கிருஷ்ணரின் அருளைப் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கிருஷ்ணரை வழிபடுவார்கள்.அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீட்டைச் சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இட்டு அழகுபடுத்தினர். மேலும் மாவிலை தோரணங்களால் வீட்டை அலங்கரித்திருந்தனர். பல்வேறு வீடுகளில் கிருஷ்ணர் சிலை அல்லது படங்களை அலங்கரித்து, அவருக்கு சந்தனம், குங்குமம் பூசி, பட்டு ஆடை அணிவித்து, அவர் கையில் புல்லாங்குழலுடன் காட்சி இருக்கும்படி அழகாக அலங்கரித்திருந்தனர்.

மேலும், வீட்டுக்குள் கிருஷ்ணன் நடந்து வருவதுபோல கோலமிட்டும், சீடை, முறுக்கு, அப்பம் உள்ளிட்ட பலகாரங்களோடு அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்தும் வழிபட்டனர். வீடுகளில் உள்ள குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து அவர்களுக்கு பட்சணங்களை கொடுத்து வழிபட்டனர். ஏராளமான மக்கள் அரிசி மாவினை தண்ணீரில் கலந்து, அதனை கிருஷ்ணரின் கால் பாதங்கள் போன்று வீட்டினுள் அச்சாக வைத்து, தங்களுடைய வீட்டிற்கு கிருஷ்ணரே வந்ததாக பாவித்து அகம் மகிழ்ந்தனர்.

மேலும், கோயில்களில் உறியடி திருவிழாக்களும் நடத்தப்பட்டன. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை உட்பட பல ஊர்களிலும் கடைகளில் பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றுள்ளது.

மேலும், பலரும் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வத்துடன் வழிபடுவதற்காக வாங்கிச் சென்றனர். சென்னையில் பல இடங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தை கிருஷ்ணர், ராதையுடன் இருக்கும் கிருஷ்ணர், நண்பர்களுடன் விளையாடும் கிருஷ்ணர், வெண்ணை உண்ட கிருஷ்ணர், கோபியர்களுடன் இருக்கும் கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர் என்று பல விதமான உருவங்களில் சிறிய, பெரிய கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை ஆகின.

சென்னை புரசைவாக்கம், மயிலாப்பூர், தியாகராயநகர், பாரிமுனை, மூலக்கடை, பெரம்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, பூந்தமல்லி மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிருஷ்ணர் சிலைகள் கடந்த ஒரு வாரமாக விற்பனை செய்யப்பட்டது. அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் தங்கள் வீடுகளுக்கு வாங்கி சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது. தோரணம், மாவிலை மற்றும் பூஜைக்குரிய பொருட்களை ஏராளமானவர்கள் கடை வீதிக்கு வந்து வாங்கி சென்றனர். இதனால் கடைவீதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கூட்டம் அலைமோதியது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை 9.15 மணி முதல் நாளை காலை 7.30 வரை அஷ்டமி திதி இருக்கிறது.

எனவே கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வீடுகளிலும் பலர் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

சென்னை இ.சி.ஆரில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் மகா அபிஷேகமும், பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று (27ம்தேதி) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

The post கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் கூட்டம் அலைமோதின appeared first on Dinakaran.

Tags : Krishna Jayanti ,Kolagalam ,Kannan ,Chennai ,Krishna Jayanti festival ,Tamil Nadu ,Mavilai Torans ,Kutik Kannan ,Kolakalam ,
× RELATED லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்தும் இசையமைப்பாளர்