×

கடலில் அலைகள் அதிகரிப்பால் கணவாய் மீன்பிடிக்கும் மீனவர்கள் ஏமாற்றம்

ராமேஸ்வரம், ஆக.27: ராமேஸ்வரத்தில் தூண்டில் மீன்பிடிப்பில் மிகக் குறைவான கணவாய் மீன்கள் சிக்கியதால், பாரம்பரிய மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ராமேஸ்வரம் சங்குமால் கடலில் பாரம்பரிய மீன்பிடிப்பில் தூண்டில் கணவாய் மீன்பிடிப்பு ஒன்றாகும். தெர்மாகோல் மிதவை மற்றும் தூண்டில்களுடன் அதிகாலையில் சங்குமால் கடற்கரையில் இருந்து பெரிய நாட்டுப் படகில் சிறிய தூரம் கடலுக்குள் சென்று தெர்மாகோல் மிதவையில் அமர்ந்து தூண்டிலை பயன்படுத்தி கணவாய் மீன்பிடிப்பில் ஈடுபடுவர்.

கடல் வளத்தை பேணி காக்கும் இதில் ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சங்குமால் கடற்கரையில் இருந்து நேற்று காலை 3 மணிக்கு 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தெர்மாகோல் மிதவை மற்றும் தூண்டிலுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். கரையோரம் மீன்பிடித்து காலை 9 மணிக்கு கரை திரும்பினர். கடலில் தொடர்ந்து வழக்கத்துக்கு மாறாக கடல் அலைகள் இருந்ததால் தூண்டிலில் கணவாய் மீன்கள் அதிகளவு சிக்கவில்லை.

இதனால் கரைக்கு வந்த மீனவர்களின் பைகளில் குறைவான கணவாய் மீன்களே இருந்தன. வழக்கமாக 5 கிலோ முதல் 10 கிலோ வரை பிடித்து வரும் மீனவர்கள் நேற்று குறைந்தபட்சம் ஒரு கிலோவும், அதிகபட்சமாக 2.5 கிலோ கனவாய் பிடித்து வந்தனர். மிகக் குறைந்த அளவில் கணவாய் மீன்வரத்து இருந்ததால் பாரம்பரிய மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கணவாய் மீன் ஏற்றுமதி முற்றிலும் குறைந்தது.

The post கடலில் அலைகள் அதிகரிப்பால் கணவாய் மீன்பிடிக்கும் மீனவர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Rameswaram Sangumal Sea ,Sangumal beach ,
× RELATED அச்சம் தரும் ரயில்வே குடியிருப்பு சீரமைக்க ஊழியர்கள் வலியுறுத்தல்