×

சகோதரர்களிடம் தெரிவிக்காமல் பிரிக்கப்படாத சொத்தில் கட்டுமான பணி தொடங்கிய அதிமுக பிரமுகர்: நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சியில் தம்பி புகார்

சென்னை: பெருங்குடி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மனோகரன். இவர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். என்னுடன் பிறந்தவர்கள் ஆண்கள் 6 பேர் மற்றும் பெண் ஒருவர். எங்களது தந்தை மற்றும் தாய் இறந்து விட்டனர். நாங்கள் அனைவரும் எங்களுக்குட்பட்ட சொத்தை பாகப்பிரிவு செய்து அவரவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி அனுபவித்து வருகிறோம். இருந்த போதிலும் சர்வே எண், பழைய எண். 62 புதிய எண்.244ல் உள்ள இடம் சுமார் ஒரு ஏக்கர் நிலமாகும்.

இந்த இடம் கிராமம் நந்தம் என்பதால், பாகப் பிரிவினை மற்றும் பத்திரப் பதிவு செய்யப்படாமல் நாங்கள் அனைவரும் இந்த சொத்தை ஆண்டு அனுபவித்து வந்தோம். இந்நிலையில் எனது மூத்த அண்ணன் சுந்தரேசன் தன்னிச்சையாக எந்தவொரு சகோதர்களிடம் தகவல் தெரிவிக்காமல் தானாகவே இடத்தினை அளந்து கட்டுமானப் பணி தொடங்கி உள்ளார். நாங்கள் அனைவரும் அவர்களிடம் சென்று எங்களுக்கு சொந்தமான இடத்தினை சரி பாகமாக பிரித்து கொடுத்து பின்னர் கட்டுமானப் பணி தொடங்கும்படி கேட்டோம்.

ஆனால், அவர் இந்த சொத்து முழுவதும் கிராமம் நந்தம் என்பதால் முழு சொத்தும் எனக்கே சொந்தம் என்றும், நான் அப்படித் தான் கட்டிடம் கட்டுவேன், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். பின்னர் நாங்கள் அனைவரும் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு சுந்தரேசன் மற்றும் இதர சகோதரர்களுக்கு சொந்தமான இடத்தை சரிபாதியாக பிரித்து கொடுக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதற்கும் அவர்கள் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் எங்களுக்குண்டான பாகப்பிரிவினை செய்வதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

மேலும் வார்டு-184 பெருநகர சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தொடர்புக் கொண்டு இந்த கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த நேரடியாக சென்று வாய்மொழியாக கூறினோம். அதற்கு உதவி பொறியாளர் வாய்மொழியாக எந்தவொரு புகாரை ஏற்றுக் கொள்ள இயலாது என தெரிவித்துள்ளார். பிறகு கடந்த மே மாதம் 6ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளேன். இதன் அடிப்படையில் உதவி பொறியாளர், வார்டு-184 மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகிய இருவரும் இக்கட்டிடத்தை ஆய்வு செய்வு இக்கட்டிடத்திற்கு Calling for approval Plan Notice சுந்தரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வரை இக்கட்டிட பணி நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் அறிவிப்பில் 15 நாள் நோட்டீசுக்கு பதில் அளிக்கப்படவில்லை என்றால் மீண்டும் Lock மற்றும் Seal Notice வழங்கப்படும் என தெரிவித்ததின் அடிப்படையில் சுந்தரேசனுக்கு Lock மற்றும் Seal Notice வழங்கப்பட்டுள்ளனவா? இச்சூழலில் தற்போது வரை கட்டுமான பணி நிறுத்தப்படாமல் நடந்து வருகிறது என தெரிந்து மீண்டும் மின்னஞ்சல் மூலம் கடந்த ஜூலை 10ம் தேதி புகார் அளித்துள்ளேன்.

எனவே இந்த புகார் மீது ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் பிறந்த சகோதரர்களுக்கு தெரிவிக்காமல் தனி ஒருவராக சொத்தை பிரித்து, கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள சுந்தரேசன் அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சகோதரர்களிடம் தெரிவிக்காமல் பிரிக்கப்படாத சொத்தில் கட்டுமான பணி தொடங்கிய அதிமுக பிரமுகர்: நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சியில் தம்பி புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Manokaran ,Pilliyar Koil Street, Perungudi ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு