×
Saravana Stores

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வெப்பநிலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் இருந்தாலும் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்கள், கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், நன்னீரில் வளரக்கூடிய, ‘ஏடிஸ்’ கொசுக்கள் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டில் இதுவரை 7,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து, அடுத்த மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போதைக்கு டெங்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை, இருப்பினும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். அதுமட்டுமின்றி புகை மருந்து அடிப்பது, கிருமி நாசினி தெளிப்பது, குளோரின் அளவு சரி பார்ப்பது உள்ளிட்ட பணிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழைக்காலம் என்பதால் அந்த காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது அதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அச்சம் கொள்ள தேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

The post அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Dengue ,Public Health Department ,Chennai ,Tamil Nadu ,Southwest ,Monsoon ,
× RELATED பட்டாசுகளை திறந்த இடத்தில் வெடிக்க...