×
Saravana Stores

வேடசந்தூரை வட்டமடித்தபடி போர் விமானம் தாழ்வாக பறந்ததால் மக்கள் அச்சம்

வேடசந்தூர்: வேடசந்தூர் பகுதியில் தாழ்வாக பறந்த போர் விமானத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் காங்கேயம்பாளையத்தில் இந்திய வான் படையின் விமான தளம் உள்ளது. இங்கு போர் விமானிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பயிற்சிக்காக வரும் போர் விமானங்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி வரை வட்டமிட்டு செல்கின்றன. இந்நிலையில் நேற்று மதியம் 2 போர் விமானங்கள் வேடசந்தூர் பகுதியில் மிக அதிக சத்தத்துடன் தாழ்வாக பறந்தன.

எப்போதும் உயரத்தில் பறக்கும் போர் விமானங்கள் தாழ்வாக பறந்ததால் வேடசந்தூர் பகுதி மக்கள் சற்று அச்சமடைந்தனர். மாவட்டத்தில் திண்டுக்கல், குஜிலியம்பாறை, வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது அடிக்கடி நடந்து வருகிறது. இவ்வாறு வெடிச்சத்தம் கேட்கும் போது கட்டிடங்கள் குலுங்குவதால் மக்கள் செய்வதறியாமல் வீட்டை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வருகின்றனர்.

குஜிலியம்பாறையில் நேற்று பிற்பகல் 3.35 மணியளவில் நில அதிர்வு போன்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. பாளையம், கோவிலூர், அழகாபுரி, வேடசந்தூர் பகுதிகளிலும் இந்த வெடிச்சத்தம் பலமாக கேட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குஜிலியம்பாறையில் ஏற்பட்ட வெடிச்சத்தத்தால் கடை மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் அதிர்ந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நத்தம் பகுதியில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது குறிப்பிடத்தக்கது.

The post வேடசந்தூரை வட்டமடித்தபடி போர் விமானம் தாழ்வாக பறந்ததால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Vedsandur ,Vedasandur ,Indian Air Force ,Sulur Kangeyambalayam ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED விமானப்படை தேர்வில் ஆள் மாறாட்டம்: வட மாநில வாலிபர் கைது