×
Saravana Stores

இழுவை கட்டணம் தராத விவகாரம் காரைக்கால் துறைமுகத்தில் நிற்கும் சரக்கு கப்பலை சிறைபிடிக்கலாம்: சென்னை ஐகோர்ட் ஆணை

சென்னை: இழுவை கட்டணம் தராத விவகாரத்தில் சரக்கு கப்பலை சிறை பிடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காக்கிநாட்டை சேர்ந்த ஆதித்யா மரைன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:எங்கள் நிறுவனம் கடலில் தரைத்தட்டி நிற்கும் கப்பல்களையும், பழுதாகி நிற்கும் கப்பல்களையும் இழுத்து செல்லும் பணியை செய்து வருகிறது. இந்நிலையில், காரைக்கால் துறைமுகத்தில் பழுதாகி நின்ற டால்பின் நம்பர்-1 என்ற கப்பலை காரைக்காலில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு இழுத்து செல்வதற்காக டால்பின் நம்பர்-1 கப்பல் நிறுவனம் எங்கள் நிறுவனத்தை அணுகியது. அதன்படி இருதரப்புக்கும் ஒப்பந்தம் நடந்தது.

இதையடுத்து, எங்கள் இழுவை கப்பல் காரைக்கால் சென்றபோது டால்பின் நம்பர்-1 கப்பல் இழுத்து செல்ல முடியாத நிலையில் இருந்தது. பழுதடைந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக காரைக்காலில் டால்பின் நம்பர்-1 கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதால் அதை அங்கிருந்து இழுத்து செல்ல சென்னை வணிக கப்பல் துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், உடனடியாக டால்பின் நம்பர்-1 கப்பலை அங்கிருந்து புறப்படுவதற்கு அனுமதி கிடைக்க உள்ளதாக கடந்த 8ம் தேதி எங்களுக்கு தகவல் வந்தது. டால்பின் நம்பர்-1 கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டால் எங்களுக்கு தரவேண்டிய தொகையான ரூ.35 லட்சத்து 71,342 கிடைக்காமல் போய்விடும். எனவே, டால்பின் நம்பர்-1 கப்பலை சிறை பிடிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, ‘டால்பின் நம்பர்-1 கப்பலை காரைக்காலில் இருந்து விசாகப்பட்டினம் இழுத்து வருவதற்காக ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் தரவேண்டிய தொகை ரூ.35 லட்சத்தை தரவில்லை’ என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையில் முகாந்திரம் உள்ளதால் டால்பின் நம்பர்-1 கப்பலை சிறை பிடிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில் டால்பின் நம்பர்-1 கப்பல் நிறுவனம் செப்டம்பர் 2ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post இழுவை கட்டணம் தராத விவகாரம் காரைக்கால் துறைமுகத்தில் நிற்கும் சரக்கு கப்பலை சிறைபிடிக்கலாம்: சென்னை ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Karaikal port ,Madras High Court ,Chennai ,Chennai High Court ,Aditya Marine Company ,Kakkinath ,Dinakaran ,
× RELATED கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரங்களை தர ஆணை!