×

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம்: சான்பிரான்சிஸ்கோ நகரில் 29ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு; உலகின் முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுகிறார்

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு அமெரிக்கா புறப்படுகிறார். அங்கு தொழில் முதலீட்டாளர்கள், உலகின் முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளையும் முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். 2021ம் ஆண்டு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்து, அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதற்காக அவர் முதலீட்டாளர்களை தொடர்ந்து சந்தித்து தமிழ்நாட்டில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 2வது கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டு 17,371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிற வகையில் ரூ.7,441 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன. 3ம் கட்டமாக 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது.

இந்த மாநாடு மூலம் அதிகபட்சமாக ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி அளவுக்கு முதலீடுகளும், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 13 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4ம் கட்டமாக 27.1.2024 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். இதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கடந்த 21ம் தேதி சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.51,157 கோடியில் 28 திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.17,616 கோடி முதலீட்டில் முடிவுற்ற 19 திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதன்மூலம் ரூ.1,06,803 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். நாளை (28ம் தேதி) சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைகிறார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறார்கள்.

29ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்வெஸ்டர் கான்கிளேவ் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். அதைத் தொடர்ந்து 31ம்தேதி புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார். சிகாகோவில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 28ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை சான்பிரான்ஸ்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். அப்போது, அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிக்காகோ செல்லும் முதல்வர் அன்று முதல் 10 நாட்களுக்கு பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுகிறார். அமெரிக்காவில் பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சுமார் 30 இடங்களுக்கு சென்று முதல்வர் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, அமெரிக்காவில் உள்ள 500 முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 14ம் தேதி சென்னை திரும்புகிறார். முதல்வர் அமெரிக்கா பயணம், தமிழகத்தில் புதிய முதலீடு, வேலைவாய்ப்புகள் மற்றும் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையில் அமையும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்வதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்று விட்டார்.

சிகாகோவில் அமெரிக்க தமிழர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதையொட்டி அது குறித்து சிகாகோவில் அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல் அங்கு நடைபெற உள்ள மற்ற நிகழ்ச்சிகள் குறித்தும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன் ஏற்பாடுகள் செய்து வருகிறார். முன்னதாக, அமெரிக்காவில் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்திப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்து விரிவாக எடுத்துக்கூற திட்டமிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம்: சான்பிரான்சிஸ்கோ நகரில் 29ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு; உலகின் முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,America ,Tamil Nadu ,in investors' ,San Francisco ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு முதலீடு...