×

உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது ஆக்டோபஸ் அட்டைப்பூச்சி அண்ணாமலை என அழைப்போம்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

வாடிப்பட்டி: இனி ஆக்டோபஸ் அட்டைப்பூச்சி அண்ணாமலை என அழைக்க தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம், சமயநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் வரலாறு தெரியாத அண்ணாமலை, மன அழுத்தத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டது போல் பேசியிருக்கிறார். பதவி வெறி, பதவி மோகம், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, அண்ணாமலைக்கு சித்த பிரம்மை பிடித்திருக்கிறது. எந்த உழைப்பும் இல்லாமல் ஒரு சொட்டு வேர்வை சிந்தாத அண்ணாமலை, ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுக வேண்டும். அப்படி இல்லை என்றால் நாங்கள் உங்களுக்கு மதுரையில் நல்ல மருத்துவரை ஆலோசனைக்கு அனுப்புகிறோம்.

ஆக்டோபஸ் அட்டைப்பூச்சியின் நஞ்சுக்கு மருந்து கிடையாது. அதுபோல அண்ணாமலையால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. தமிழகத்திற்கு எந்த வளர்ச்சியும் பெற்று தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை, தான் சார்ந்த கட்சியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு சதவீதம் கூட நிதி ஒதுக்காததற்கு, துப்பு கெட்ட அண்ணாமலை சீறி எழுந்து இருக்க வேண்டாமா? சிறப்பு திட்டங்கள், ரயில்வே திட்டங்களை ஒன்றிய அரசு புறக்கணிப்பு செய்ததற்கு, நிதி ஒதுக்காததற்கு இதுவரை ஏன் அண்ணாமலை வாய் திறக்கவில்லை. சுத்த தமிழனாக இருந்தால் நீங்கள் கர்நாடகாவில் வேலை செய்யாமல் தமிழ்நாட்டில் வேலை செய்திருக்க வேண்டும்.

நீங்கள் ஐபிஎஸ் பதவியில் இருக்கும்போது, என் சேவை எப்போதும் தமிழ்நாட்டில்தான் இருக்கும், கர்நாடகாவில் இருக்காது என கூறி இருக்க வேண்டும். இல்லையென்றால் பதவி வேண்டாம் என்று செல்லி இருக்க வேண்டும். பச்சை தமிழன் என சொல்லிக்கொண்டு, பச்சை துரோகியாக கர்நாடகாவில் சேவை செய்து அங்கு தமிழினத்தை கேவலமாக பேசி இன்று பாஜவில் நியமன பதவியை வைத்துக்கொண்டு வாய் சவடால் பேசுகிறார் அண்ணாமலை. கழுதையாக கத்தினாலும் தமிழக மக்கள் உங்களை ஏற்க மாட்டார்கள். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. ஒரு கவுன்சிலர் பதவியில் நின்று வெற்றி பெற முடியாதவர் அண்ணாமலை.

நாகரீகமான முறையில் பேசுவதற்கு நீங்கள் யாரிடமும் பயிற்சி எடுக்கவில்லையா?. பகல் கனவு காண்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் பகல் கனவில் முதல்வராக, பிரதமராக அல்லது அமெரிக்க ஜனாதிபதியாக மாறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்ற காத்திருந்த கொக்கு, கடைசியில் குடல் வற்றி செத்துப்போனது போல, அண்ணாமலையின் முதல்வர் கனவு பறிபோகும். அண்ணாமலையின் பேச்சு தமிழகம் மட்டுமல்ல. உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்கள் முகத்தையும் சுளிக்கும் வகையில் உள்ளது.

நீங்கள் பதவியேற்ற பிறகு பாஜவில் எந்த தலைவராவது வெளியே தெரிகிறார்களா? பாவம் அந்த அக்கா தமிழிசை இப்போது எல்லாம் வெளியே தெரிவதில்லை. நீங்கள் வகிக்கும் மாநிலத் தலைவர் பதவியை கண்ணியக்குறைவோடு நடத்துகின்ற அளவில் உங்கள் பேச்சு உள்ளது. அதிமுக கட்சியை டெண்டர் கட்சி என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி தான் டெண்டர் கட்சி. உங்கள் கட்சியில் தான் மோசடி கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை பின்புலத்தில் உள்ளவர்கள் அடைக்கலமாகி உள்ளனர்.

ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத அண்ணாமலை, தமிழகத்திற்கு என்னென்ன பெற்றுத் தந்திருக்கிறேன் என்று குறிப்பிடட்டும். நாங்கள் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுகிறோம். அதிமுக தொண்டர்கள் இனிமேல் அண்ணாமலையை ‘ஆக்டோபஸ் அட்டைப்பூச்சி அண்ணாமலை’ என்றே அழைக்கலாம் என தீர்மானம் இயற்றுவோம் என்றார். எடப்பாடி உருவபொம்மை எரிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கடைவீதியில் அதிமுகவினர் அண்ணாமலை உருவபொம்மையையும் போட்டியாக பாஜவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையையும் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* பல இடங்களில் உருவ பொம்மை எரிப்பு
எடப்பாடி பழனிசாமி குறித்து, அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் ராமநாதபுரம் பாரதி நகர் பஸ் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி அவரது உருவ பொம்மையை எரித்தும், அவரது உருவப்படத்தை கிழித்தும், எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல நெல்லை கொக்கிரகுளம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களிலும் அதிமுகவினர் அண்ணாமலை உருவபொம்மையை எரித்தனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

* தலைவர் பதவி பறிபோகும் என அச்சத்தில் பேசுகிறார்: கே.பி.முனுசாமி தாக்கு
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நேற்று கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டி: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மக்களை சந்திக்காமல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து அரசியல் நடத்துகிறார். தன்னுடைய மாநில தலைவர் பதவி பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில், லண்டனுக்கு படிக்க செல்கிறேன் என்றும், தான்தோன்றித்தனமாகவும் பேசுகிறார். தனக்கு தலைமை பொறுப்பு தொடர்ந்து இருக்காது என்ற பயம் அண்ணாமலைக்கு வந்து விட்டது. அதனால், இருக்கின்ற வரை, ஏதாவது கருத்துக்களை சொல்லி விட்டு போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதனை நிச்சயமாக அக்கட்சியின் தலைமையில் இருப்பவர்கள் உணர்ந்து, விரைவில் அவரை மாநில தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். திராவிட கட்சிகளை ஒழிப்போம் என அண்ணாமலை பேசுகிறார். கடந்த 1967 முதல் திராவிட கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆள்கிறது என்பது அவருக்கு புரியவில்லை. இந்திய அளவில், பாஜ ஆளும் மற்ற மாநிலங்களை விட, திராவிட கட்சிகள் ஆளும் தமிழகம், அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் உள்ளது என்பதை அண்ணாமலை உணரவேண்டும் என்றார்.

* 7 பக்கங்களில் எழுதி வைத்து சாடல்
ஆர்.பி.உதயகுமார் அண்ணாமலை குறித்து விமர்சிப்பதற்காக 7 பக்கங்கள் வரை எழுதி வைத்து, அவ்வப்போது பார்த்து விமர்சனங்களை முன் வைத்தார்.

The post உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது ஆக்டோபஸ் அட்டைப்பூச்சி அண்ணாமலை என அழைப்போம்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : R. B. Udayakumar ,Wadi Patti ,former minister ,Madurai District ,Samayanallur ,R. B. ,Udayakumar ,R. B. Udayakumar Avesam ,
× RELATED விசிக மது ஒழிப்பு மாநாடு: எடப்பாடி...