×
Saravana Stores

மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள்: அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

சென்னை: நீங்களாக உங்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால் மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என அண்ணாமலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நீண்ட காலமாகவே விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துகளை கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்த அவர், பதவியை விட்டு விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்து, பதவி உயர்வு பெற்று தமிழக பா.ஜ.க. தலைவராக அமர்ந்தவர் அண்ணாமலை. பா.ஜ.க.வில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமோ, அமைப்பு ரீதியான தொடர்பு எதுவுமே இல்லாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அபத்தமாக பேசக் கூடிய அண்ணாமலை நாள்தோறும் ஊடக வெளிச்சம் பெறுவதற்காக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை நேற்று நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குற்றம் சுமத்தி பேசியிருக்கிறார்.

இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்த காங்கிரஸ் கட்சிக்கு 1971 முதல் திராவிட கட்சிகளுக்கு அடிமையாக இருப்பதாக கூறியிருக்கிறார். யாருக்கு யார் அடிமையாக இருந்தார்கள் என்பதை வரலாற்றுப் புரிதல் இல்லாத அண்ணாமலைக்கு சில கருத்துகளை ஆதாரப்பூர்வமாக, புள்ளி விவரங்களோடு கூற விரும்புகிறோம். பெருந்தலைவர் காமராஜர் மறைவிற்கு முன்பு தி.மு.க. எதிர்ப்பு அரசியலில் முழு வீச்சில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி 1971 சட்டமன்றத் தேர்தலில் 55 லட்சம் வாக்குகளும், மொத்த வாக்குகளில் 35 சதவிகிதம் தனித்து போட்டியிட்டு பெற்றதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்கு பிறகு அ.தி.மு.க. உதயமான பிறகு 1977 மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதற்கு பிறகு 1980 மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்களவை தேர்தலில் தி.மு.க. 16 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றது.

அதேபோல, 1984 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 26 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல, சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 73 இடங்களில் போட்டியிட்டு 61 இடங்களில் வெற்றி பெற்றோம். 1991 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்டு 28 இடங்களிலும் வெற்றி பெற்றோம். இதைப்போல, தி.மு.க. கூட்டணியில் 2019, 2024 தேர்தல்களில் போட்டியிட்டு சுயமரியாதையோடு தொகுதி பங்கீடு நடைபெற்று காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றிருக்கிறது. எந்த கூட்டணியிலும் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை பெற்றதற்கு காரணம் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணிக்கு தான் தமிழக மக்கள் ஆதரவு அளிப்பதால் கூட்டணியில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி பெற முடிந்தது. இதுதான் தமிழக தேர்தல் களத்தின் யதார்த்த நிலை. அதேபோல, தமிழக தேர்தல் களத்தில் 1977 இல் அன்னை இந்திரா காந்தி பதவி விலகியதற்கு பிறகு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்று 20 சதவிகித வாக்குகளை பெற்றது.

1989 சட்டமன்றத் தேர்தல் என்பது தி.மு.க., அ.தி.மு.க. (ஜெ), அ.தி.மு.க. (ஜா), காங்கிரஸ் என்று நான்குமுனை போட்டி நடைபெற்றது. அதில் தலைவர் ராஜிவ்காந்தி அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறி தனித்து போட்டியிட்டு 48 லட்சம் வாக்குகளும், 20 சதவிகித வாக்கு வங்கியும், 26 இடங்களிலும் வெற்றி பெற்றோம். அதேபோல, அ.தி.மு.க. ஒரு இடத்திற்கு கூடுதலாக 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த தேர்தலிலாவது, எந்த கூட்டணியிலாவது காங்கிரஸ் பெற்றதைப் போல மொத்தம் 39 மக்களவை தொகுதிகளில் 27 தொகுதிகளிலும் போட்டியிட்டு 27 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற சரித்திரம் உண்டா ? அதேபோல, சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 20 சதவிகித வாக்குகளை பெற்று 26 சட்டமன்ற உறுப்பினர்களை என்றைக்காவது பெற்றிருக்கிறதா ? 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 12 லட்சம். வாக்கு சதவிகிதம் 2.86 தான்.

அதேபோல, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வுடன் சேர்ந்து 23 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பா.ம.க.வும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 18 சதவிகித வாக்கு வங்கியை பெற்றதாக அண்ணாமலை கூறுகிறார். கூட்டணியில் போட்டியிடுகிற போது எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் என்பதை துல்லியமாக கூற முடியாது என்பதை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாக இருக்கிற அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கிற பா.ஜ.க.வில் அண்ணாமலை தலைவராகி விட்டார். ஒன்றிய அரசில் பா.ஜ.க. இருப்பதனால் பண பலத்தை கொண்டு அரசியல் நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் திராவிட இயக்கங்களோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்த போது சுயமரியாதையோடு தான் நடத்தப்பட்டதே தவிர, பா.ஜ.க.வை போல காங்கிரஸ் கட்சி என்றைக்குமே அடிமைகளாக இருந்ததில்லை. எனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்களே, உங்களது நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றுச் சொன்னால் வருகிற ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உங்களது மக்கள் விரோத போக்கிற்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். நீங்களாக உங்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால் மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள்: அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Congress ,Selvaperunthakai ,Annamalai ,Tamil Nadu BJP… ,
× RELATED மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வேண்டும்: செல்வப்பெருந்தகை