×

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே 3 மாதங்களில் 4 கொள்கையை எதிர்த்த ஒன்றிய அமைச்சர்: கொள்கை முடிவை அமல்படுத்த முடியாமல் தவிக்கும் பாஜக தலைவர்கள்

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே கடந்த 3 மாதங்களில் 4 முக்கிய கொள்கையை ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்த்ததால், பாஜக தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அமைந்து 3 மாதங்கள் நெருங்கும் நிலையில், ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் (ராம்விலாஸ்) தேசிய தலைவருமான சிராக் பஸ்வான், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகிறார். கடந்த 3 மாத இடைவெளியில் நான்கு முறை, தனது மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

ஏற்கனவே இவர் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இவ்விசயத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் கோரிக்கைக்கு சிராக் பஸ்வான் ஆதரவாக உள்ளார். வாக்கு அரசியலுக்காக அவர் சாதிவாரி கணக்ெகடுப்பை கோருகிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு விசயத்தில் பாஜகவின் நிலைபாட்டுக்கு எதிராக சிராக் பஸ்வான் கூறிய கருத்துகள், கூட்டணி அரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசுப் பணியில் யுபிஎஸ்சியில் நேரடி ஆட்சேர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு ஆதரவாகவே சிராக் பஸ்வான் செயல்பட்டார். அதனால் ஒன்றிய அரசு நேரடி ஆட்சேர்ப்பு முறையை திரும்பப் பெற்றது.

ேமலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்’ முறையை கொண்டு வரவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டத்துக்கு சிராக் பஸ்வான் ஆதரவு தெரிவித்தார். எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது போல், இவரும் ஆதரவளித்தார். அதேபோல் மதசார்பற்ற சிவில் சட்டம் தொடர்பான விசயத்திலும், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது, ‘இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது சவாலானது; பழங்குடியினர் மற்றும் பல்வேறு மத மற்றும் கலாசார சமூகங்களுக்கான பாரம்பரிய விசயங்கள் உள்ளதால், இந்த பிரச்னையில் நீண்ட விவாதம் தேவை’ என்றார். இவ்வாறாக ஒன்றிய பாஜக அரசின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே, ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக சிராக் பஸ்வான் விமர்சனங்களை முன்வைப்பது பாஜக தலைவர்கள் மட்டுமின்றி கூட்டணிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

The post தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே 3 மாதங்களில் 4 கொள்கையை எதிர்த்த ஒன்றிய அமைச்சர்: கொள்கை முடிவை அமல்படுத்த முடியாமல் தவிக்கும் பாஜக தலைவர்கள் appeared first on Dinakaran.

Tags : Union ,minister ,National Democratic Alliance ,NEW DELHI ,BJP ,SIRAK BASWAN ,NATIONAL DEMOCRATIC COALITION ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் பாஜக...