×
Saravana Stores

தாய் சேய் நலம் காக்கும் தாய்ப்பால்!

நன்றி குங்குமம் டாக்டர்

இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தையும், தாய்ப்பாலில் உள்ள சத்துகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் நிறுவனம், சர்வதேச மருத்துவக் கழகம் இணைந்து தாய்ப்பால் வாரம் அனுசரிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

தாய்ப்பாலின் அவசியம் பற்றி தெரிந்துகொள்வோம்:

குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பகத்தில் சுரக்கும் முதல் பாலுக்கு சீம்பால் என்று பெயர், இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீம்பாலை ஆங்கிலத்தில் கொலஸ்டிரம் என்று கூறுவார்கள். பிறந்த குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும், புரதமும் இந்த சீம்பாலில் அதிகம் உள்ளது.குழந்தை பிறந்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு சீம்பாலைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் சீம்பாலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை, சிறுகுடல் அப்போதுதான் உறிஞ்ச முடியும்.

குழந்தை பால் குடிக்க குடிக்கத்தான் தாய்க்குப் பால் அதிகமாக சுரக்கும். குழந்தையின் வயிற்றில் மிகவும் எளிதாக ஜீரணம் ஆகும்படி புரதச்சத்தும் மற்ற ஊட்டச்சத்துகளும் உள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தி வழங்குவதுடன் குழந்தை நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வதற்குத் தாய்ப்பால் அவசியம்.

சீம்பாலின் முக்கியத்துவம்

சீம்பால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான இம்மியூனோ குளாபுலின் என்னும் புரதம் நிறைந்தது. சீம்பாலில் சாதாரண தாய்ப்பாலை விட அதிகளவு இம்மியூனோ குளாபுலின் என்ற புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும், விட்டமின் டி மற்றும் தாது உப்புக்களும் உள்ளன.குழந்தை பிறப்பதற்கு 10-15 நாட்களுக்கு முன்புதான் தாயின் ரத்தம் சீம்பாலாக மாற்றப்படுகிறது.

இதை ஆங்கிலத்தில் குளாபுலினோ ஜெனிசிஸ் என்று கூறுவார்கள். குழந்தை பிறக்க 10 நாட்கள் இருக்கும்போதே தாயின் மார்பகக் காம்பை அழுத்தினால் அதிலிருந்து பிசின் போன்று மஞ்சள் நிறத்தில் சீம்பால் வரும், இது குழந்தை பிறக்கப்போவதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகும். சீம்பாலில் இம்மியூன் பேக்டர் என்னும் நோய் எதிர்ப்புச் சக்தியும், குரோத் பேக்டர் என்னும் உடல் வளர்ச்சிக்கான சக்தியும் உள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தியில் உள்ள வேதிப்பொருட்கள்:

இம்மியூனோ குளாபுலின், லாக்டோ பெர்ரின், லைசோசைம், லாக்டோபர் ஆக்சிடேஸ், புரோலின் ரிச் பெப்டைட் உடல் வளர்ச்சிக்கான சக்தியில் உள்ள வேதிப்பொருட்கள்:

எபிடர்மல் குரோத்பேக்டர், டிரான்ஸ் பார்மிங் குரோத் பேக்டர், இன்சுலின் லைக் குரோத் பேக்டர்.

தாய்மார்கள் பாலூட்டும்போது மார்பகத்தைப் பராமரிக்கும் முறைகள்:

*சென்ட் போன்ற வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது.

*மார்பகங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

*இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. தளர்வான உடைகள் மட்டுமே அணிய வேண்டும்.

*சானிடரி நாப்கின்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.

*தாய்மார்கள் தங்கள் உடல்நிலையை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

*குளிக்கும்போது மார்பகத்தை தண்ணீரால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். சோப்பை பயன்படுத்தினால் காம்பு காய்ந்து போவதுடன், எரிச்சலும் உண்டாகும்.

*குளித்து முடித்ததும், சுத்தமான துண்டால் மார்பகத்தைத் துடைக்க வேண்டும்.

*பால் கொடுப்பதற்கு முன்பும், பின்பும் மார்பகத்தை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

*நீண்ட இடைவெளி விட்டு குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது. அடிக்கடி பால் கொடுத்தால்தான் பால் நன்றாகச் சுரந்து குழந்தை நன்றாக ஆரோக்கியமாக வளரும்.

*குழந்தைக்கு பால் ஊட்டும்போது நீங்கள் மகிழ்ச்சியாக பால் ஊட்ட வேண்டும். குடும்பப் பிரச்னைகள் பற்றி கவலையோ, பயத்துடனோ கொடுத்தால் அது குழந்தையின் மன நிலையைப் பாதிக்கும்.

*தாய்ப்பால் கொடுக்கும்போது வசதியாக சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு பால் கொடுக்க வேண்டும்.

*குழந்தையை தாய் தன் உடலோடு அரவணைத்துப் பாலூட்ட வேண்டும். அப்போதுதான் தாய்க்கும் குழந்தைக்குமான பாசப்பிணைப்பு அதிகமாகும். இதனால்தான் புரோலாக்டின் ஆக்சிடோசின் என் ஹார்மோன்கள் உற்பத்தியாகி தாய்ப்பால் சுரப்பதற்கும், மார்பகத்தில் இருந்து வெளிவரவும் உதவுகிறது.

தாய்ப்பால் உற்பத்தியைப் பெருக்குவது எப்படி

*குழந்தை அழும்போது மட்டுமே பால் கொடுக்காமல் அடிக்கடி கொடுக்க வேண்டும்.

*பாலூட்ட தேவையான ஓய்வையும், தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*இரண்டு மார்பகங்களிலும் முழுவதும் பால் ஊட்ட வேண்டும்.

*புட்டிப்பால் கொடுப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் மட்டுமே ஊட்ட வேண்டும்.

*இரவில் பால் ஊட்டும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். குழந்தை தூங்கிவிட்டால் அதன் காதை நீவி விட வேண்டும். அல்லது உள்ளங்காலைத் தேய்த்து தூக்கத்தைக் கலைத்து பால் ஊட்ட வேண்டும். தூங்கிக் கொண்டே பால் கொடுக்கக் கூடாது.

தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

கீரைகள், குறிப்பாக பசலைக்கீரை அதிகம் உண்ணலாம். பூண்டு அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி, ஆப்பிள், ஆப்ரிகாட் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சாக்லேட், மசாலா அதிகம் கலந்த உணவுகள், ஸ்ட்ராபெர்ரி, கிவிப்பழம், அன்னாசிப்பழம், வெங்காயம், முட்டைக்கோஸ், காலிப்ளவர், புரோக்கோலி, வெள்ளரிக்காய், செர்ரி வகை பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வயிறு நிறைய குழந்தை பால் குடித்ததா என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறைகள்:

*குழந்தை பால் குடித்து முடித்ததும் மார்பில் இருந்து தனது வாயை வெளியே எடுத்துவிட்டு விளையாட ஆரம்பித்து விடும். பக்கத்தில் இருப்பவைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடும்.
*நன்றாக பால் குடித்துக் கொண்டிருந்த தனது வேகத்தைக் குறைத்துக் கொள்வதுடன், தீவிரமாக இல்லாமல் மிகவும் மெதுவாக குடிக்க ஆரம்பிக்கும்.
*தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தை 24 மணி நேரத்தில் ஆறு தடவை சிறுநீர் கழித்தால் குழந்தை தனக்கு தேவையான அளவு தாய்ப்பால் குடித்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
*ஒரு மாதத்திற்கு 500 கிராமிலிருந்து குழந்தையின் உடல் நிலைக்குத் தகுந்தபடி குழந்தையின் எடை அதிகரிக்கும்.
*குழந்தைக்கு அவசியம் 6 மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அல்லது பால் சுரக்கும் காலம் வரை கொடுக்கலாம்.
*தாய்ப்பால் சரியாக குடிக்காத குழந்தைகளில் 15 விழுக்காடு நிமோனியா நோயினாலும் 11 விழுக்காடு வயிற்றுப்போக்கு நோயினாலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் ஆண்டுதோறும் 8 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்காத காரணத்தால் இறந்து விடுகின்றனர். மேலும், தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் வளர்ந்த பிறகு குரேன்ஸ் நோய். அல்சரேடிவ் கொலைடிஸ் நோய்கள் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே நோயில்லா குழந்தைகளை உருவாக்க தாய்ப்பால் மிகவும் அவசியமானதாகும்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்.

The post தாய் சேய் நலம் காக்கும் தாய்ப்பால்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,World Breastfeeding Week ,Dinakaran ,
× RELATED முடி உதிர்தலுக்கு தீர்வு தரும் புதிய ஹோமியோபதி சிகிச்சை!