×
Saravana Stores

விராலிமலை அருகே 40 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய குடியிருப்புகளுக்கு ஒளியேற்றிய விடியல் அரசு

* மின்னொளியில் படிப்பதாக மாணவர்கள் பெருமிதம்

* தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

விராலிமலை : விராலிமலை அருகே கடந்த 40 வருடமாக இருளில் மூழ்கிக்கிடந்த குடியிருப்புகளுக்கு ஒளியேற்றி விடியல் தந்த தமிழக அரசுக்கு நீர் ததும்பிய விழிகளுடன் குடியிருப்புவாசிகள் நன்றி தெரிவித்தனர். மாணவர்கள் மின்னொனியில் பாடங்கள் படிப்பதாக பெருமிதம் அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்ஜிஆர் நகர் அடுத்துள்ளது பாறைகள் சூழ்ந்த குடியிருப்பு பகுதி புறம்போக்கு நிலம் என்பதால் வசிப்பிடங்களுக்குரிய பட்டா இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

பகல் முழுவதும் சூரியன் தரும் ஒளியில் வாழ்ந்து வந்த அவர்கள் இரவு நெருங்கிவிட்டால் இருளில் மூழ்கி விடுவார்கள். கடந்த காலங்களில் மண்ணெண்ணய் விளக்குடன் இரவு பொழுதை கழித்து வந்த இவர்கள் தற்போது வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் டார்ச் லைட், கைப்பேசி டார்ச் வெளிச்சத்துடன் இரவு பொழுதை கழித்து வந்தனர். இருப்பினும் அந்த செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்கு கூட அடுத்த வீதியில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் உதவியை நம்பும் சூழல் இருந்து வந்துள்ளது. இது பல நேரங்களில் அவர்களுக்கு அவமானங்களை தேடி தந்துள்ளதாக வேதனையுடன் கூறுகிறார் கல்லூரி மாணவி புவனேஸ்வரி.

தங்கள் பிள்ளைகளுக்கு வாய்க்கு ருசியான உணவு வகைகளை எளிதாக தயாரித்து வழங்க முடியாத நிலையில் இருந்து வந்தது பெற்றோர்களுக்கு மேலும் வேதனையை தந்துள்ளது.
பல ஆண்டுகளாக இந்த நிலை வாழ்வுக்கு பழகிவிட்டதால் விழா காலங்களை தவிர்த்து பெரும்பாலான நாட்களில் பழைய சாதம், குழம்பு, ரசம் மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்துள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் போது விராலிமலை தொகுதியில் அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கரிடம் மின் இணைப்பு வேண்டி பலமுறை மனு அளித்தும் தங்கள் வாழ்வில் விடியல் கிடைக்கவில்லை என்கிறார் குடும்பத்தலைவி கிருஷ்ணவேணி.

இதை தொடர்ந்து தற்போது விராலிமலை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த ரவி என்பவரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து விராலிமலை தாசில்தார் கருப்பையாவை அணுகிய ஊராட்சி மன்ற தலைவர் ரவி மின் வாரியத்துக்கும், வருவாய்த்துறைக்கும் ஊராட்சி மன்றம் மூலம் எந்த உதவியும் செய்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மின்வாரியத்திடம் முறையிடப்பட்டது இதையடுத்து நிலைமையை உணர்ந்த அரசு இயந்திரம் உடனடி நடவடிக்கை எடுக்கு முடிவு செய்தது பட்டா இல்லை என்றால் என்ன அவர்களும் நம் போல மனிதர்கள் தானே என்ற முடிவுக்கு வந்தது அரசு அவர்கள் இல்லங்களில் ஒளியேற்றுவதல் மூலம் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் நடவடிக்கையில் இறங்கியது.

இதைத்தொடர்ந்து பாறைகளை குடைந்து புதிய வழித்தடம் அமைக்கப்பட்டு மூன்று புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது. இது தங்கள் வாழ்விற்கு தரப்பட்டுள்ள விடியல் என்கிறார் முருகேசன்.ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், குடியிருப்பில் உள்ளனர். விளக்கு ஒளியில், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்த அவர்களுக்கு மின் இணைப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மாலை நேரத்தில் மின் விளக்கில் படித்து, கொசுக்கடி இல்லாமல் இரவு பொழுதை கழித்து, காலை மகிழ்ச்சியுடன் கல்வி கற்க செல்கின்றனர் மாணவர்கள் என்கிறார் கூலி தொழிலாளியான குடும்பத்தலைவர் வேல்முருகன்.

மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன், தமிழ் புதல்வன்,காலை உணவு என மக்கள் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி தாய் எட்டடி என்றால் குட்டி 16 அடி பாயும் என்ற முதுமொழிக்கேற்ப தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 40 வருட இருளுக்கு முடிவு கட்டி அவர்கள் வாழ்வுக்கு விடியல் தந்துள்ளது அனைவர் மத்தியிலும் நன் மதிப்பை பெற்றுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

The post விராலிமலை அருகே 40 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய குடியிருப்புகளுக்கு ஒளியேற்றிய விடியல் அரசு appeared first on Dinakaran.

Tags : Dawn Govt ,Viralimalai ,Tamil Nadu Government ,
× RELATED ரசாயன உரங்கள் இல்லாத பச்சை காய்கறிகள்;...