- நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம்
- மேட்டுப்பாளையம்
- நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம்
- மேட்டுப்பாளையம்-நெல்லித்துறை சாலை
- நீலகிரி மாவட்டம்
- நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம்
- தின மலர்
*மிசோரம் மாநில அதிகாரிகள் பாராட்டு
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் – நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் கடந்த 1935ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 46,548 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குகள் மற்றும் வெள்ளைப்பூண்டுகள் வாகனங்கள் மூலமாக விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில் மிசோரம் மாநில அரசு விவசாயம், விவசாயிகள் நலன் மற்றும் தோட்டக்கலைத்துறை சிறப்புச்செயலாளர் ராம்டின்லியானி தலைமையில் அம்மாநில உயர் அதிகாரி லல்லியன் ஜூவாலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராபர்ட் லால்ரிங் சங்கா, கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் வாங்லுபுயா, நிலவளம், மண், நீர் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி லால்ரெம்ருவாடி, விவசாயம் மற்றும் விவசாய நலன் துறை (விவசாய – வணிகம்) ஜூலி ஜோடின்புய், வணிகம் மற்றும் தொழிற்துறை துணை இயக்குநர் ரோனால்ட் லால்ச்சுவானாவ்மா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு ஏல விற்பனை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு, நீலகிரி விவசாயிகள் கொண்டு வரும் மலைப்பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு ஏலம் விடுவது குறித்து கள ஆய்வு மூலம் தெரிந்து கொண்டனர். பின்னர் நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், துணைப்பதிவாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயல்பாடுகள், உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் விதம், இயங்கும் விதம், ஏலம் விடும் முறை குறித்து அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இது குறித்து நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் கூறுகையில், ‘‘மிசோராமில் கூட்டுறவு விற்பனை சங்கத்தை செயல்படுத்த, சிறந்த கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளை கள ஆய்வு மூலம் விபரங்களை சேகரித்து அங்கு செயல்படுத்த திட்டமிட்டு சிறந்த சங்கமான நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் பற்றி சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொண்டு மிசோரம் அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர்.நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டில் உள்ள மேட்டுப்பாளையம் விற்பனை சங்கங்களை பார்வையிட்டு இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டு தெரிந்துகொண்டனர்’’ என்றார்.
இது குறித்து மிசோரம் மாநில தோட்டக்கலைத்துறை சிறப்பு செயலாளர் ராம்டின்லியானி கூறுகையில், ‘‘நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் காய்கறிகள், உருளைகிழங்கு, பூண்டு போன்றவைகள் இடைதரகர்கள் இன்றி இங்கு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பயன்பெறுகின்றனர்.மேட்டுப்பாளையம் சங்கத்தில் உருளைகிழங்கு, பூண்டு ஆகியவை ஏலம் விடப்பட்டதை நேரில் கண்டோம். மிசோராமில் விவசாயிகளின் நலன் கருதி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அங்கு விளையும் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம்போல் விற்பனை செய்ய உள்ளோம்.
அதற்கான பயிற்சியை இங்கு கள ஆய்வு மூலம் கண்டுகொண்டோம். இதற்கான கட்டமைப்பு வலுவாக உள்ளதை கண்டோம். விவசாயிகள், வியாபாரிகளுடம் கலந்துரையாடி உள்ளோம்.இந்த ஆய்வு எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது. கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள், விவசாயிகளின் கருத்துகள், வியாபாரிகளின் வியாபார யுத்திகள் போன்றவற்றை ஆராய்ந்து மிசோராம் அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
The post நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது appeared first on Dinakaran.