சென்னை: வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
வட சென்னையின் முக்கிய இடங்களில் “வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்” கீழ் வளர்ச்சியின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்ட முக்கிய திட்டங்களில், மாதிரி பள்ளிகளை மேம்படுத்துதல், ஏற்கத்தக்க விலையில் வீடுகள், திறன் மேம்பாட்டு மையத்தை உருவாக்குதல், புதிய பேருந்து முனையங்கள் மற்றும் பணிமனைகளை தரம் உயர்த்துதல் மற்றும் கட்டுமானம், முக்கிய பகுதிகளில் துணை மின்நிலையங்களை நிறுவுதல், போதைப்பொருள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை அமைத்தல், சிசிடிவி கேமராக்களை பொருத்துவதன் வாயிலாக பாதுகாப்பினை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக உயர்தர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணி, குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்றல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள், வணிக சந்தைகள், சலவையகம், குருதி சுத்திகரிப்பு மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு கட்டுமானங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
முதலமைச்சர் கடந்த 14.03.2024 அன்று சென்னை, தங்கச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை பகுதிக்கு விரிவான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ் பதினோரு துறைகளை உள்ளடக்கி ரூ.4,378 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின்கீழ், சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் 53.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,25,402 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைதளத்தில் 64 கடைகளும், அலுவலக அறையும், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும்,
முதல் தளத்தில் 70 கடைகளும், இரண்டாம் தளத்தில் உணவு விடுதி வளாகம் உட்பட 54 கடைகளும், முற்றத்தில் மீன் வள அமைப்புகள் என மொத்தம் 188 கடைகளுடன் அமைக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம்; சென்னை, இராயபுரம் மூலகொத்தலத்தில் சுமார் 0.67 ஏக்கர் பரப்பளவில் 14.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 41,593 சதுர அடி கட்டட பரப்பளவில் அடித்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய சமுதாய நலக்கூடம்; சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் சுமார் 1.04 ஏக்கர் பரப்பளவில் 11.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45,198 சதுர அடி கட்டட பரப்பளவில் தரைதளத்தில் சலவைக் கூடங்கள், இயந்திரக் கூடங்கள், துவைக்கும் கூடங்கள், உலர்த்தும் இயந்திரங்கள் மற்றும் துணி தேய்க்கும் இடம், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் துணி உலர்த்தும் இடம், என 60 அறைகள் கொண்ட நவீன சலவைக்கூடம்;
புழல் ஏரிக்கரையில் சுமார் 8.17 ஏக்கர் பரப்பளவில் 16.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, இயற்கை காட்சி அமைப்புடன் கூடிய உயர்மட்ட நடைபாதை, மியாவாக்கி காடு வளர்ப்பு, குழந்தைகளுக்கான கண்காட்சி இடம், இயற்கை குளம், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள புழல் ஏரிக்கரை; ரெட்டேரி ஏரிக்கரையில் சுமார் 4.38 ஏக்கர் பரப்பளவில்
13.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுழைவாயில் அரங்கம், இணைக்கும் பாலங்கள், இயற்கை தோட்டம் மற்றும் பூங்கா, நடைபாதை, சூரிய மின்கலம் கொண்ட நிழல் இருக்கைகள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள ரெட்டேரி ஏரிக்கரை;
கொளத்தூர் ஏரிக்கரையில் சுமார் 0.4 ஏக்கர் பரப்பளவில் 6.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை நடைபாதை, படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, செயற்கை நீர்வீழ்ச்சி, இசை பூங்கா, ஒளிரும் மீன் சிற்பங்கள், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள கொளத்தூர் ஏரிக்கரை; என மொத்தம் 115.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
கொளத்தூர், நேர்மை நகரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி ஆணையாளர் அலுவலகம், கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரம், சி.கே.சாலையில் 2.27 கோடி ரூபாய் செலவில் நவீன சலவைக் கூடம் மற்றும் 45 இலட்சம் ரூபாய் செலவில் 3 நியாய விலைக் கடைகள்; என மொத்தம் 5.22 கோடி செலவில் முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், தாயகம் கவி, வெற்றியழகன், ஆர்.மூர்த்தி, திரு.ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் ப.ரங்கநாதன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா,
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் சி.எம்.டி.ஏ. முதன்மைச் செயல் அலுவலர் அ.சிவஞானம், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் த.மோகன், மீன்வளத் துறை ஆணையாளர் (பொ) மகேஸ்வரி ரவிக்குமார், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன், மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.