×
Saravana Stores

தி.நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

சென்னை: நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்கிறது. எனினும் மற்ற மாநகரங்களுடன் ஒப்பிடும்போது இங்கு மரங்களின் எண்ணிக்கை குறைவு. சென்னையில் கோடை காலங்களில் மட்டுமே வாட்டி வதைத்த வெயில், இப்போது ஆடி மாதத்திலும் சுட்டெரிக்கிறது. மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதே இதற்கு காரணம்.

மக்கள் தொகை எண்ணிக்கை, மக்கள் நெருக்கத்திற்கேற்ப எவ்வளவு மரங்கள் இருக்க வேண்டுமென்ற வரையறைகளை சுற்றுச்சூழல் அமைப்புகள் கணக்கிட்டு வைத்துள்ளன. அதன்படி சென்னை மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் இருக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருகி வரும் குடியிருப்பு கட்டுமானங்கள், சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் பணி, மேம்பால கட்டுமானம் போன்ற காரணங்களால் சென்னையிலிருக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதேபோல் குடியிருப்பு பகுதிகள், சாலையோரம் வளர்க்கப்படும் மரங்களும், மோசமான பராமரிப்பு அல்லது வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமின்மை, குடிநீர் குழாய்கள், கழிவு நீர் குழாய், மழைநீர் வாடிகால் என பல காரணங்களால் அழிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இணைந்த அமைப்பு ஒன்று, சென்னையில் மரங்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. குறிப்பாக, தி.நகரில் நடத்திய ஆய்வில், சர் பி.டி தியாகராய சாலை, வெங்கட்நாராயணா சாலை, ஜி.என் செட்டி ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு மரங்களின் நிலையை ஆய்வு செய்தது.

இந்த சாலைகளில் 2004ம் ஆண்டில் 317 மரங்கள் ஆய்வு செய்யப்பட்டிருந்தன. மரங்களின் உயிரியல் பெயர்கள், உயரம், அகலம் போன்ற அறிவியல் அம்சங்கள், அதை பாதிக்கும் அம்சங்கள் ஆராயப்பட்டன. 2004 மற்றும் 2024ம் ஆண்டுக்கு இந்த 3 சாலைகளில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 317 இருந்தது. இது தற்போது 327ஆக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரம், தற்போதைய மரங்களின் எண்ணிக்கையில் 20 வயதுக்கு மேற்பட்டவை 201 மரங்கள் மட்டும் தான்.

2004 அல்லது அதற்கு முன் நடப்பட்ட 317 மரங்களில் 113 மரங்களை காணவில்லை என்கிறது அந்த ஆய்வு. தி.நகர், ஜி.என். செட்டி சாலை மற்றும் தியாகராய சாலையில் அதிக மரங்கள் வளர்ந்துள்ளன. அதேசமயம் வெங்கட்நாராயணா சாலையில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்சொன்ன மூன்று பகுதிகளில் 231 மரங்களை சுற்றி மேடைத்திட்டு அல்லது நடைபாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. 89 மரங்களில் மேல்பட்டை உடைப்பு போன்ற பாதிப்புகளும், 53 மரங்களை சுற்றி பள்ளம் தோண்டியிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி நடக்கும் பல்வேறு பணிகள் காரணமாக, அதிகளவில் மரங்கள் நடுவது தற்போது குறைந்துள்ளது. புதிதாக நடப்பட்டு வளர்ந்து வரும் மரங்களை விட நன்கு வளர்ந்த பழைய மரங்களே அதிக அளவில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதற்கு சான்றுகள் உள்ளதாக, ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

The post தி.நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : D. Nagar ,Chennai ,Nagar ,Dinakaran ,
× RELATED தி.நகர் நகைக்கடையில் போலி நகைகளை...