×
Saravana Stores

ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை மாணவர்கள் அவசியம் பார்வையிட வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவ- மாணவியும் அவசியம் காணவேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வைகுண்டம் அருகே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மிகப்பெரிய பரம்பு. இப்பகுதியில் ஆய்வு பணிகளை தொடங்கி அகழாய்வு பணி தீவிரமாக நடந்தது. இந்த அகழாய்வு பணியில் தங்கம், வெண்கலம், இரும்பால் ஆன பொருட்கள், மண்பாண்டத்தில் ஆன முதுமக்கள் தாழிகள், பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏ, பி, சி என 3 பிரிவுகளாக நடந்த அகழாய்வு பணியில் பி மற்றும் சி பிரிவுகளில் அதிகமாக பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பி சைட்டில் இந்தியாவிலேயே முதன் முறையாக சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த சைட் மியூசியம் என்பது தொல்பொருட்களை எடுத்த இடத்தில் அப்படியே காட்சிப்படுத்துவதே ஆகும். இந்த பி சைட்டில் முதுமக்கள் தாழிகளை அதே இடத்தில் வைத்து அதன் மேலே கண்ணாடி பேழைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் இங்கு வந்து இந்த சைட் மியூசியத்தை பார்வையிட்டு பாராட்டியும் செல்கின்றனர். இந்நிலையில் கீழவல்லநாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மாதிரி அரசு பள்ளியில் உள்ள மாணவ- மாணவிகளை சந்தித்து கலந்துரையாடிய கனிமொழி எம்பியிடம், நாங்கள் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றது கிடையாது. எனவே நீங்கள் எங்களை தொல்லியல் சார்ந்து நமது பண்பாடு சார்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். நிச்சயம் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்த கனிமொழி எம்பி, நேற்று அவர்களின் ஆசையை நிறைவேற்றினார்.

மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவியர் 200 பேரை 4 பஸ்கள் மூலம் ஆதிச்சநல்லூருக்கு அழைத்து வந்தார். இந்த பஸ்களில் மாணவ- மாணவிகளுடன் அவரும் பயணம் செய்தார். ஆதிச்சநல்லூர் பி சைட்டில் உள்ள சைட் மியூசியம், சி சைட்டில் மியூசியம் அமைய உள்ள இடத்தில் வைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை மாணவ, மாணவியருடன் சேர்ந்து பார்வையிட்டார். பின்னர் கனிமொழி எம்பி கூறுகையில், ‘‘பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவ- மாணவியும் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த சைட் மியூசியம் இது. எனவே அரசு மாதிரி பள்ளியை தற்போது ஆதிச்சநல்லூர் அழைத்து வந்து காட்டியுள்ளோம். இதுபோல் மற்ற பகுதியில் இருந்து மாணவ- மாணவிகள் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை காண வரவேண்டும். நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலையில் மாநில தொல்லியல் துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கில் மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து எடுத்த பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விரைவில் பொருநை அருங்காட்சியகம் திறக்கப்படும்’’ என்றார்.

முன்னதாக அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம் குறித்து திருச்சி மண்டல ஒன்றிய தொல்லியல் ஆய்வாளர் முத்துக்குமார், சைட் மேற்பார்வையாளர் சங்கர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் ஆகியோர் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வைகுண்டம் தாசில்தார் சிவகுமார், வைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்பநாப பிள்ளை, அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு, எஸ்ஐ செல்வ பிரிட்டோ, வல்லநாடு கே.ஜி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து சிவன், முனைவர் கந்தசுப்பு, திமுக கருங்குளம் ஒன்றிய செயலாளர் இசக்கிபாண்டியன், ஆதிச்சநல்லூர் பஞ். தலைவர் பார்வதி, பஞ். கிளார்க் சிவசுப்பிரமணியன், கால்வாய் பஞ். கிளார்க் சுரேஷ், செய்துங்கநல்லூர் ஆர்ஐ பிரபாபதி, விஏஓக்கள் கருங்குளம் ராஜ்குமார், செய்துங்கநல்லூர் விஜயமூர்த்தி, சைட் பொறுப்பாளர்கள் வெங்கடேஷ், அந்தோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை மாணவர்கள் அவசியம் பார்வையிட வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Adichanallur ,Kanimozhi ,Karinganallur ,Kanimozhi MP ,Vaikundam ,Thamirapharani River ,Thoothukudi ,
× RELATED தமிழ்நாட்டில் நல்லாட்சி பற்றி அதிமுக...