வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி கடமலைக்குண்டு, வருசநாடு வழியாக வரும் மூல வைகை செல்கிறது. மழை காலங்களில் இந்த ஆற்றில் வரும் மழைநீர், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு சென்று சேருகிறது. மூல வைகை ஆறு பல்வேறு கிராமங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வைகை கரையோரம் உள்ள விளைநிலங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இதனால், ஆழ்துளை கிணறு, கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கு பயன்படும். இதேபோல, யானை கெஜம் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள இலவமரம், கொட்டை முந்திரி, பீன்ஸ், அவரை, தக்காளி, கத்தரி, தென்னை, மாதுளை, எலுமிச்சை, பூசணி, நெல்லி, வாழை சாகுபடிகள் பயன்பெறும். மேலும், யானை கெஜம் அருவியில் தடுப்புச்சுவர் கட்டினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்துக்கு பயன்பெறும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை மூல வைகையில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.