×
Saravana Stores

எந்த தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராத காவலரை பணி நீக்கம் செய்யாமல் கட்டாய ஓய்வு வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவில் மணிமுத்தாறு மண்டபம் முகாமில் கடந்த 2003ல் கிரேட்-2 கான்ஸ்டபிளாக சேர்ந்தவர் பி.பழனிச்சாமி. இவர் கடந்த 2006ல் 3 நாட்கள் விடுமுறை எடுத்தார். ஆனால், எந்த தகவலும் தெரிவிக்காமல் 21 நாட்கள் பணிக்கு வரவில்லை. இதேபோல், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு ஆவடி பட்டாலியனில் கிரேட்-2 கான்ஸ்டபிளாக 1997ல் சேர்ந்தவர் எம்.ஆரோக்கியசாமி. இவரும் எந்த தகவலும் தெரிவிக்காமல் 2002 நவம்பர் 1ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை.

இதையடுத்து, இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணி நீக்க உத்தரவை எதிர்த்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி இருவரையும் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, பழனிச்சாமிக்கு பணி செய்வதற்கு விருப்பம் இல்லை. ஆரோக்கியசாமி ஏற்கனவே இதேபோல் 21 நாட்கள் பணிக்கு வரவில்லை. மருத்துவ சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடமையை சரியாக செய்யாமல் இருப்பது நடத்தை தவறுவதாகும். காவல்துறை இருவர் மீதும் முதலில் பெரிய தண்டனை தரவில்லை. தொடர்ந்து பணிக்கு வராததால்தான் பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமியை பொறுத்தவரை அவர் விடுமுறை எடுத்து தொடர்ந்து வராமல் இருந்துள்ளார். எனவே, அவரை பணி நீக்கம் செய்ததை மாற்றம் செய்து அவரை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும். ஆரோக்கியசாமியை பொறுத்தவரை பணிக்கு வராததற்கு அவர் கூறிய மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. எனவே, அவரை பணி நீக்கம் செய்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இருவருக்கும் விதிகளின்படி உரிய பணப்பலன்களை பெற உரிமை உள்ளது. அந்த பணப்பலன்களை சம்பந்தப்பட்ட துறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post எந்த தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராத காவலரை பணி நீக்கம் செய்யாமல் கட்டாய ஓய்வு வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,B. Palanichamy ,Tamil Nadu Special Police Division ,Manimuttaru Mandapam ,ICourt ,Dinakaran ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை