×
Saravana Stores

பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை திமுக தருகிறது நம்பிக்கைகளுக்கு அரசு தடையாக இருக்காது: பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை திமுக தருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். ‘செயல்பாபு’ என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு, அறநிலையத் துறை அமைச்சராக வந்த பிறகு, இந்த துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி நடந்து வருகிறது.

பழநி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய ஏழு முருகன் கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடந்து வருகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், பக்தர்கள் நலனை மனதில் வைத்து, கோயில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி இருக்கிறோம். வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்களை 58 கோடியே 54 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கி கையகப்படுத்துகின்ற பணிகள் நடந்து வருகிறது.

அறுபடை வீடு முருகன் கோயில்களில் 789 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 251 பணிகள் நடந்து வருகிறது. அறுபடை வீடு அல்லாத முருகன் கோயில்களில் 277 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 588 பணிகள் நடந்து வருகிறது. 69 முருகன் கோயில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டிருக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற 4000 மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லாத காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட இருக்கிறது. பழநி கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களுக்கு பாதயாத்திரை வருகிற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் 3000 ரூபாய் என்று வழங்கப்பட்டு வந்ததை 4000 ரூபாயாக உயர்த்தியும், 54 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டதை 2000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

தவில், நாதஸ்வரக் கல்லுாரி, அர்ச்சகர் மற்றும் வேத ஆகம பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக 3000 ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை கடந்த ஆண்டு முதல் 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, கோயில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த 1,298 பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 111 பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கார்கள். கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், ஊக்கத்தொகை உயர்வு செய்தல், தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்த 1,298 பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்பட்டது.

ஓய்வூதியதாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி பல திட்டங்கள் இருக்கிறது. ஏதோ திடீர் என்று பழநியில் மாநாடு நடத்தவில்லை. இப்படிப்பட்ட பணிகளை எல்லாம் செய்து கொண்டுதான் பழநியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும், அதில் உயர்வு, தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல, அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.

திராவிட மாடல் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அனைத்து துறை வளர்ச்சி – அனைத்து சமூக வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி – என்று விளக்கிக்கொண்டு வருகிறோம். அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறையையும் மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறோம். திமுகவின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசரால் இந்து சமய அறநிலைய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பண்பாட்டுச் சின்னங்களான கோயில்கள் முறையாக பாதுகாக்கப்படவேண்டும், முறையாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று சீரோடும், சிறப்போடும் கோயில்கள் இயங்க அடித்தளம் அமைத்தது அந்தச் சட்டம்தான். கடந்த மூன்றாண்டு காலத்தில் 1,355 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்று உள்ளது. அதேபோல, 3 ஆயிரத்து 776 கோடி ரூபாயில் 8 ஆயிரத்து 436 கோயில்களில் திருப்பணிகள், 50 கோடி ரூபாயில் கிராமப்புற ஆதிராவிடர் கோயில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம்.

மேலும் 62 கோடியே 76 லட்சம் ரூபாயில் 27 கோயில்களில் ராஜகோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. 80 கோடியே 50 லட்சம் ரூபாயில் பழனி – இடும்பன்மலை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டிருக்கிறது. 5 ஆயிரத்து 577 கோடி ரூபாய் மதிப்புடைய 6 ஆயிரத்து 140 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது. 756 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தினந்தோறும் 82 ஆயிரம் பேர் உணவு உண்டு வருகிறார்கள்.

கோயில் சொத்துகளை அளவிடும் பணி நடந்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, 64 ஆயிரத்து 522 கற்கள் நடப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 189 ஏக்கர் நிலம், மீண்டும் கோயில் பெயரில் பட்டா செய்யப்பட்டிருக்கிறது. இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு. திராவிட மாடல் அரசின் சாதனைகளை, இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டிருக்கிறது. அதில் இருந்து சிலவற்றைதான் இப்போது சொல்லியிருக்கேன்.

அந்த புத்தகத்தை நீங்கள் எல்லோரும் வாங்கிப் படிக்கவேண்டும். நீங்கள் மட்டுமில்லை; ஊடகத்துறையைச் சேர்ந்த நண்பர்களும் இந்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த சாதனைகளுக்கு மகுடம் வைத்தது போல, பழநியில் நடக்கின்ற இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மிக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப்பெறும். ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெறவேண்டும், கோயில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும், அன்பால் உயிர்கள் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும்.

* அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மிக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப்பெறும்.

* ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெறவேண்டும்.

* கோயில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்.

* அன்பால் உயிர்கள் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும்.

The post பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை திமுக தருகிறது நம்பிக்கைகளுக்கு அரசு தடையாக இருக்காது: பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stal ,International Muthamil Murugan Conference ,Palani ,CHENNAI ,M. K. Stalin ,International Muthamij ,Murugan ,International Muthamij Murugan conference ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற தொகுதிவாரியாக திமுக பாக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி