×

குடும்ப அட்டை வழங்குவதில் தாமதம் இல்லை தகுதியுள்ள அனைவருக்கும் புதிய அட்டை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: குடும்ப அட்டை வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை. விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இதுவரை 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான பயனாளிகள் குடும்ப அட்டையை அடிப்படையாக கொண்டு கணக்கெடுக்கப்பட்டதால், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மாறுபடாமல் பராமரிக்கப்பட்டதையொட்டி 6.7.2023 முதல் புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பணியும் ஏற்கனவே அச்சடிக்கும் நிலையில் இருந்த குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

ஆனாலும் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 17,197 குடும்ப அட்டைகள் டிசம்பர் 2023 மாதத்தில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மார்ச் 2024 மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இடையில் மக்களவை தேர்தல் நடைமுறைகளின் காரணமாக விண்ணப்பங்களை சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவியதால் தேர்தல் முடிந்தபின் கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டன.

2,89,591 விண்ணப்பங்களில் 1,63,458 புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் கள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 92,650 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட 24,657 விண்ணப்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. மீதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிவிரைந்து நடந்து வருகின்றன. சிலர் கூறுவதுபோல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை. அனைவருக்கும் விரைந்து வழங்கப்படும்.

The post குடும்ப அட்டை வழங்குவதில் தாமதம் இல்லை தகுதியுள்ள அனைவருக்கும் புதிய அட்டை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakrapani ,Chennai ,Minister of ,Food ,and Food ,Supply ,Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 10,000 பகுதி நேர நியாய...