×
Saravana Stores

5 நாள் தொடர் விடுமுறை எதிரொலி அரியானா தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்: பாஜ வலியுறுத்தல்

சண்டிகர்: ஐந்து நாள் தொடர் விடுமுறை வருவதால் வாக்குப்பதிவு குறையும் என்பதால் அரியானா தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பாஜ வலியுறுத்தி உள்ளது. அரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடைபெறும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வௌியிட்டது. அக்.4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதியை மாற்ற கோரி பாஜ தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.

இதுகுறித்து மாநில பாஜ தேர்தல் நிர்வாக குழு உறுப்பினர் வரீந்தர் கர்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பேரவை தேர்தல் நடைபெறும் அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பாக செப்டம்பர் 28 சனி மற்றும் செப்.29 ஞாயிறு ஆகிய கிழமைகளில் விடுமுறை. தேர்தல் நடைபெறும் அக்டோபர் 1ம் தேதியும் விடுமுறை. மறுநாள் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை, அக்.3ம் தேதி மகாராஜா அக்ராசென் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினமும் விடுமுறை. 5 நாள் தொடர் விடுமுறை வருவதால் செப்.30 மட்டும் விடுமுறை எடுத்தால் 6 நாள் தொடர் விடுமுறை வரும் என்பதால் பலரும் லீவு எடுத்துவிட்டு ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.

அதனால் வாக்குதிவு சதவீதம் குறையும். எனவே பேரவை தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அரியானா பா.ஜ கடிதம் எழுதி உள்ளது. அந்தக் கடிதத்தை கட்சியின் மாநிலத் தலைவர் மோகன் லால் படோலி தேர்தல்கமிஷனுக்கு அனுப்பி உள்ளார். அரியானா தலைமை தேர்தல் அதிகாரி பங்கஜ் அகர்வால், இமெயில் மூலம் பா.ஜ கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.

* காங்கிரஸ், ஆம்ஆத்மி கிண்டல்
பாஜவின் நிலைப்பாடு ஏற்கனவே தோல்வியை ஏற்றுக்கொண்டதை காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா கூறினார். அவர் கூறுகையில்,’ தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. தோல்வியை ஏற்றுக்கொண்டதால் தேர்தலை ஒத்திவைக்க பாஜ விரும்புகிறது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தேதியின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரியானா மக்கள் பாஜ அரசு ஒரு நாள் கூட ஆட்சியில் இருப்பதைப் பார்க்க விரும்பவில்லை’ என்றார்.

ஆம் ஆத்மியின் அரியானா பிரிவு எக்ஸ் தளத்தில், ‘தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, ஆளும் பாஜ தேர்தலில் அதன் தோல்வியை உணரக்கூடிய காரணத்தால் சாக்குகளைத் தேடத் தொடங்கியுள்ளது. பா.ஜ அரசு மாநிலத்தில் முறையாக வேலை செய்திருந்தால், தேர்தலை ஒத்திவைக்க முயன்றிருக்காது. இந்த முறை பா.ஜவின் தோல்வி உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்திய தேசிய லோக் தளத்தின் (ஐஎன்எல்டி) சவுதாலா கூறுகையில்,’ வாக்குப்பதிவு தேதியை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். மக்கள் நீண்ட வார இறுதி நாட்களில் விடுமுறையில் செல்வதால், வாக்குப்பதிவு 15 முதல் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது’ என்றார்.

* ஆம்ஆத்மியுடன் கூட்டணி இல்லை
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பியும், அரியானா மூத்த தலைவருமான குமாரி செல்ஜா பேசுகையில், ‘‘ஆம் ஆத்மியுடன் தேசிய அளவிலான கூட்டணியில் மட்டும் தான் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். மாநிலத்தை பொறுத்தவரை கூட்டணி குறித்து அவரவர் சொந்தமாக முடிவு செய்யலாம். சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி இல்லை என்பதை ஆம் ஆத்மி முதலில் பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் தனித்து வலுவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்” என்றார்.

The post 5 நாள் தொடர் விடுமுறை எதிரொலி அரியானா தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்: பாஜ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ariana ,BJP ,Chandigarh ,Election Commission ,Ariana Legislative Assembly ,
× RELATED அரியானா ஜிண்டால் சர்வதேச...