×
Saravana Stores

சிவகங்கை அருகே எருமை, ஆடுகளை பலியிட்டு ரத்தம் குடிக்கும் வழிபாடு


சிவகங்கை: சிவகங்கையில் எருமைகள், ஆடுகளை பலியிட்டு, ரத்தம் கீழே சிந்தாமல் குடிக்கும் வினோத திருவிழா இன்று நடந்தது. சிவகங்கையில் உள்ள பையூர் பழமலைநகரில் ஒரு சமூகத்தை சேர்ந்த 300குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரை வீரன், முத்து மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து வந்தனர். இதைத் தொடர்ந்து ஆக.22ல் திருவிழா பெருமாள்சாமி பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்தை குடிக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை தொடங்கியது. காளிக்கு எருமையையும் பிற தெய்வங்களை வணங்குபவர்கள் ஆடுகளையும் பலியிட்டனர். இன்று 21 எருமை கிடாக்களும், 120 ஆட்டு கிடாய்களும் பலியிடப்பட்டன. கழுத்தில் வெட்டி அதிலிருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தத்தை சாமியாடிகள் ரத்தம் கீழே சிந்தாமல் குடித்தனர்.

இதுகுறித்து பகுதி வாசிகள் கூறுகையில், “ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் (ஒரே குடும்பத்திலிருந்து வரும் வழித்தோன்றல்) குடில் அமைத்து அதில் வழிபாடு செய்து ஒரு எருமை மாட்டை பலியிடுகிறோம். அந்த கறியை அந்த குடும்ப வாரிசுகள் எந்த ஊரில் உள்ளார்களோ அவர்களுக்கு கொடுத்தனுப்புவோம். காளி அசுரனை(எருமை) வதம் செய்யும்போது தரையில் சிந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்தெழும் என்பது நம்பிக்கை. அதனால் ரத்தத்தை சிந்தவிடாமல் அப்படியே குடித்து விடுகிறோம்’’ என்றனர்.

The post சிவகங்கை அருகே எருமை, ஆடுகளை பலியிட்டு ரத்தம் குடிக்கும் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivagangai ,Baiyur Palamalai Nagar ,Kali ,Meenakshi ,Madurai Veeran ,Muthu Mariamman ,
× RELATED சிவகங்கை மாவட்டம் முழுவதும் 31 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு