டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தின் அவலம் நிலையை இந்திய கிராமங்களுக்கு பிரதமர் மோடி செய்துள்ள துரோகத்திற்கான சாட்சி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி காங்கிரஸ் தலையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கோடிக்கணக்கான கிராமப்புற மக்களின் வேலை உரிமையை உறுதி செய்யும் வகையில் 100நாள் வேலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக எக்ஸ் தளத்தில் கார்கே பதிவிட்டுள்ளார்.
ஆனால் இப்போது குறைந்த ஊதியம், நிச்சயமற்ற வேலை நாட்கள், வேலை அட்டை திடீரென ரத்தாவது என பல்வேறு சிக்கல்களுடன் 13 கோடி பேர் வேலை செய்வதாக விமர்சித்துள்ளார். தொழில்நுட்பம், ஆதார் என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி மோடி அரசு 7 கோடி பேரின் வேலை உரிமை அட்டைகள் ரத்து செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள கார்கே, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை பட்ஜெட்டில் 100நாள் வேலை திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில் நூறு நாள் வேலைக்கான போதுமானதாக இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டி உள்ள கார்கே, உத்திர பிரதேசத்துக்கான தினக்கூலி 2014ல் இருந்து இப்போதுவரை வெறும் 4% சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்து விட்டது என தெரிவித்துள்ளார். நூறு நாள் வேலை திட்டத்தை முடக்குவதன் மூலம் கிராமப்புற ஏழைகள் மீதான மோடி அரசின் அக்கறையின்மை தொடர்கிறது என்றும், இதுவே இந்திய கிராமங்களுக்கு பிரதமர் மோடி செய்துள்ள துரோகத்திற்கான சாட்சி எனவும் கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார்.
The post 100நாள் வேலை திட்டத்தின் அவலம்: கிராமங்களுக்கு பிரதமர் மோடி செய்துள்ள துரோகத்திற்கான சாட்சி: மல்லிகார்ஜுன கார்கே காட்டமான விமர்சனம்!! appeared first on Dinakaran.