×
Saravana Stores

விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண் சிலை செய்யும் பணி தீவிரம் மண் தட்டுப்பாட்டால் விலை உயர்ந்தது

பொள்ளாச்சி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிராமங்களில் களிமண் சிலை செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். களிமண் தட்டுப்பாட்டால் விலை உயர்ந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிசத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல இடங்களில் வரும் செப்.7ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. விழாவை முன்னிட்டு சிலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், கைவண்ணத்தில் தத்ருபமாக வடிவமைத்து விநாயகர் சிலை செய்யும் பணியில், பல்வேறு பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி நகர் பகுதி வடக்கிபாளையம், ஆர்.பொன்னாபுரம், கோபாலபுரம், ஆவல்சின்னாம்பாளையம், அங்கலக்குறிச்சி, கோட்டூர், அம்பராம்பாளையம், நெகமம், கோமங்கலம், பூசாரிபட்டி மற்றும் நகர் பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும், ஆர்டர் மூலம் களிமண்ணால் விநாயகர் சிலை செய்து விற்பனை செய்கின்றனர்.

இந்தாண்டில், வரும் செப்.7ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் சுற்று வட்டார கிராமங்களில் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுவோர், அரை அடி முதல் சுமார் 3 அடி வரையிலான சிலைகளை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் இரண்டு வாரத்துக்கு மேல் இருந்தாலும், கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் இருப்பதால் விநாயகர் சிலையை வடிவமைத்து அதனை வெயிலில் காயவைத்து, அதற்கு வர்ணம் பூசி தயார்படுத்தும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், விநாயகர் சிலை மட்டுமின்றி பானை உள்ளிட்டவை கூடுதலாக தயாரிப்பதற்கு போதுமான களிமண் கிடைக்காமல் இருப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆவல்சின்னாம்பாளையத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி சுப்பிரமணியம் கூறுகையில்,“பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுவோர், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண்ணால் சிலை செய்து விற்பனை செய்கின்றனர்.

ஆனால், கோதவாடி குளத்தில் குறைவான மண்பாண்ட தொழிலாளர்களுக்கே களிமண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது, களிமண் தட்டுப்பாடு அதிகளவில் இருப்பதால், இந்த ஆண்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் சிலைகள் விலை சற்று அதிகரித்துள்ளது. அரை அடி முதல் 3 அடி வரையிலான சிலைகள், ரூ.200 முதல் ரூ.3000வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் கடந்த மாதம் மழையால் விநாயகர் சிலை தயாரிப்பு மந்தமானது. இந்த மாதத்தில் கடந்த இரண்டு வாரமாக மழை குறைவால் வீட்டில் வைத்து வழிபடும் வகையிலான விநாயகர் சிலை தயாரிப்பு அதிகமாக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு விநாயகர் சிலை வடிவமைப்பு பணி நடக்கும். அதன்பின் உலர வைத்து, வர்ணம் பூசி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.

The post விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண் சிலை செய்யும் பணி தீவிரம் மண் தட்டுப்பாட்டால் விலை உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Ganesha Chaturthi ,Pollachi ,Vinayagar Chaturthi ,Anaimalai ,Coimbatore district ,Vishwa Hindu ,
× RELATED பொள்ளாச்சியில் நள்ளிரவில் சடலத்தை புதைத்த மர்ம நபர்கள்