நாமக்கல்: பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்துள்ள நவலடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ், லாரி டிரைவர். இவரது மனைவி வாசுகி. இவரது மகன் ஆகாஷ் (16), எருமப்பட்டி அருகேயுள்ள வரகூர் அரசு மேல்நிலை பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
அதே வகுப்பில், செல்லிபாளையத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணிய மகன் ரித்திஷ் (16) என்ற மாணவரும் படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணியளவில், தலைமையாசிரியர் புஷ்பராஜன், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, அனைத்து மாணவர்களையும் மைதானத்திற்கு வரும்படி உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், அனைத்து வகுப்புகளில் இருந்தும், மாணவர்கள் மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஆகாஷ் வகுப்பில் இருந்து வெளியே வந்து பார்க்கையில், வாசலில் விடப்பட்டிருந்த அவரது செருப்பை காணவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது செருப்பை யார் எடுத்து மறைத்து வைத்தது என திட்டிக் கொண்டிருந்தார். அதற்கு ரித்திஷ், நான் தான் உனது செருப்பை எடுத்து வைத்துள்ளேன். எதற்காக திட்டுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் ரித்திஷ் வேகமாக ஆகாசை தாக்கி, கீழே தள்ளி உள்ளார். இதில் சுருண்டு விழுந்த ஆகாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவன் ரித்திசை கைது செய்தனர்.
The post பள்ளியில் மாணவர்கள் மோதல்; ஒருவர் பலி appeared first on Dinakaran.