சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிப்பாதையாக மாற்றும் பணிக்காக, விஜிபி கோல்டன் பீச் மற்றும் விஜிபி ஹவுசிங் பிரைவேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்து இருந்த இடம், நீதிமன்ற உத்தரவின்படி அதிரடியாக மீட்கப்பட்டது. மேலும் ரூ.56 கோடி இழப்பீடு வழங்கிய பின்னரும் இடத்தை தராததால் அந்த இடங்களும் மீட்கப்பட்டன. சென்னை மாநகரின் பிரதான நுழைவு சாலைகளில் ஒன்றாக கிழக்கு கடற்கரை சாலை விளங்குகிறது. சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரியை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இது உள்ளது.
இந்த சாலையில் ஏராளமான கேளிக்கை விடுதிகள், சுற்றுலா தலங்கள், ஐடி நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சி மற்றும் பெருகிவரும் அடுக்குமாடி குடியிருப்புகள் காரணமாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, திருவான்மியூர் தொடங்கி, அக்கரை பகுதி வரை கடும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, கிழக்கு கடற்கரை சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழித்தடமாக மாற்றுவது என தமிழக அரசு முடிவு எடுத்து, 2005ம் ஆண்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலை விரிவாக்க பணிகள் தாமதமானது. கடந்த ஆண்டு தமிழக அரசு இதற்காக ரூ.940 கோடி நிதி ஒதுக்கியது.
அதை தொடர்ந்து, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை ஆகிய 6 பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், சாலை விரிவாக்க பணியானது திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை என 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை 3 கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கொட்டிவாக்கம் பகுதியில் ரூ.19 கோடி மதிப்பீட்டிலும், பாலவாக்கம் பகுதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டிலும், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை பகுதிகளில் ரூ.135 கோடி மதிப்பீட்டிலும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி குரூப் ஆப் கம்பெனி இடங்கள், சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட உள்ளதால், இதற்காக விஜிபி நிறுவனத்திற்கு ரூ.56 கோடிக்கு மேல் இழப்பீட்டு தொகையை அரசு வழங்கி உள்ளது. ஆனால், இழப்பீட்டுத் தொகை பெற்ற பிறகும் அரசுக்கு நிலங்களை ஒப்படைக்க தவறியதால், இதுகுறித்து பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டும் இடத்தை வழங்காமல் இருந்தனர்.
இந்நிலையில், விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட் மற்றும் விஜிபி ஹவுஸிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து உள்ளதை கண்டறிந்து அவை மீட்டெடுப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் விஜிபி ஹவுஸிங் மற்றும் விஜிபி கோல்டன் பீச் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து உள்ளதை உறுதி செய்து, அவற்றை மீட்க உத்தரவு பிறப்பித்தது.
இதை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றி நேற்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ கணபதி, உதவி கோட்ட பொறியாளர் தீபக், வருவாய் ஆய்வாளர் வாஞ்சிநாதன், உதவி பொறியாளர் ராஜா ஆகியோர் நீலாங்கரை போலீசார் உதவியுடன், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அமைத்து இருந்த மதில் சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். ரூ.56 கோடிக்கு இழப்பீடு பெற்று அரசுக்கு வழங்காமல் இருந்த இடமும் மீட்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக ரூ.56 கோடி இழப்பீடு பெற்றும் காலிசெய்ய மறுத்ததால் விஜிபி கோல்டன் பீச் இடம் மீட்பு: நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.