கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளின் வழக்கை 15 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அவசர கடிதம் எழுதியுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் இதர 4 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னதாக சிபிஐ தாக்கல் செய்த மனுவில், ‘எந்தவொரு வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் அந்த நபரின் ஒப்புதல் தேவை. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் சந்தீப் கோஷ், 4 மருத்துவர்களிடம் இச்சோதனையை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றதால், சஞ்சய் ராய் உள்ளிட்டோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தில், ‘நாட்டில் பாலியல் பலாத்காரம் தொடர் சம்பவமாக மாறியுள்ளது.
தினசரி 90 பாலியல் வழக்குகள் பதிவாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, பெண்களிடையே பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துவதும் நமது கடமை. எனவே, இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கும் வகையில் கடுமையான மத்திய சட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், இந்த வழக்குகளை 15 நாள்களுக்குள் விரைந்து விசாரித்து தீர்வளிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post பாலியல் குற்றவாளிகளின் வழக்கை 15 நாட்களில் விசாரித்து தீர்ப்பு: மோடிக்கு மம்தா பானர்ஜி அவசர கடிதம் appeared first on Dinakaran.