×

ஊட்டியில் ரூ.461.19 கோடியில் நடைபெறும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் ஜூலைக்குள் முடிக்கப்படும்-அமைச்சர் எ.வ. வேலு பேட்டி

ஊட்டி : ஊட்டியில்  ரூ.461.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை கட்டுமான பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  எ.வ.வேலு ஆய்வு செய்து அடுத்த ஆண்டு ஜூலைக்குள் அனைத்து பணிகளும் முழுமையாக  முடிக்கப்படும் என தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்பிஎப் அருகே கோல்ப் மைதான சாலைக்கும், கூடலூர் சாலைக்கும் இடைேய தமிழக அரசு  வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலமும், அருகில் கால்நடைத்துறைக்கு  சொந்தமான 15 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டு இங்கு நீலகிரி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த ஆண்டு ஜூலையில் அடிக்கல்  நாட்டப்பட்டது. ரூ.461.19 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற்று  வருகின்றன. இதனிடையே நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்  சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், கட்டுமான பணிகள்  துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக  பொதுப்பணித்துறை மற்றும் நெடுங்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கட்டிட  கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் அவர்  கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தின் தலைநகராக உள்ள  ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று  வருகிறது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் மலைப்பகுதி பாதுகாப்பு விதிகளை  பின்பற்றி தரைதளம் மற்றும் முதல் தளம் மட்டுமே கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வனத்துறை விதிமுறைகளையும் கவனத்தில் கொண்டு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ்ந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 3  பகுதிகளாக பிரித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவ  கட்டிடங்கள் ரூ.134.23 கோடியிலும், மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் ரூ.145.54  கோடியிலும், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக தனித்தனியாக  விடுதிகள், செவிலியர் விடுதி, பயிற்சி மற்றும் மருத்துவர் விடுதி,  பேராசிரியர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்காக குடியிருப்பு வசதிகள்  ரூ.181.42 கோடி மதிப்பில் என மொத்தம் ரூ.461.19 கோடி மதிப்பில் கட்டுமான  பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ள  காரணத்தினால் பணிகளை விரைந்து முடிப்பதில் சிறிது கால தாமதமாகிறது. இருந்த  போதிலும் ஒப்பந்ததாரர்கள் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்கப்படும் என  தெரிவித்துள்ளனர். முன்பு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம்  திருச்சியில் இருந்தது. இதனால் ஆய்வு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் இருந்து  வந்தது. தற்போது முதல்வர் அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டத்தில் புதிய  பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருவதால், மருத்துவ  கல்லூரி கட்டுமான பணிகளை கண்காணிக்க தலைமை பொறியாளருக்கு அறிவுத்தப்பட்டு  உள்ளது, என்றார். இந்த ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்,  மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை  முதல்வர் மனோகரி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், பொதுப்பணித்துறை தலைமை  பொறியாளர் இளச்செழியன், கண்காணிப்பு பொறியாளர்கள் ஜெயகோபால், காசிலிங்கம்,  செயற்பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, கனிமொழி, உதவி செயற்பொறியாளர்கள் ரத்னவேல்,  ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்….

The post ஊட்டியில் ரூ.461.19 கோடியில் நடைபெறும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் ஜூலைக்குள் முடிக்கப்படும்-அமைச்சர் எ.வ. வேலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Government Medical College ,Ooty ,Minister A.V. ,Velu ,Government Medical College Hospital ,Public Works ,Dinakaran ,
× RELATED நெல்லையில் உள்ள உணவகத்தில்...