×
Saravana Stores

தமிழகத்தில் காலாவதியான 26 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 56 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்கச் சாவடிகள் காலாவதியான சுங்கச் சாவடிகள். இந்த சுங்கச் சாவடிகளை அகற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 7 லட்சம் லாரி உரிமையாளர்களை காப்பாற்ற வேண்டும். சுங்கசாவடியில் சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்த்தபடுவது துரதிஷ்டவசமானது. இது உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.

பெட்ரோல், டீசலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையை தவிர, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணமாக பெட்ரோல், டீசலுக்கு முறையே லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.2 வரை மத்திய அரசு வசூலிக்கிறது. 2021-2022-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 3,08,49,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 7,66,59,000 மெட்ரிக் டன் டீசல் விற்பனை செய்யப்பட்டு உள்கட்டமைப்பு, மேம்பாட்டு நிதியாக ரூ. 2,70,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடி சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வசூலிக்கப்பட்ட பிறகு சுங்கசாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது.

ஆகவே நாடு முழுவதும் அனைத்து சுங்கசாவடிகளிலும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்க கட்டணம் வசூலிக்கும் 26 சுங்க சாவடிகளையும் மூட வேண்டும். மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து மும்பைக்கு 150 கி.மீ இந்த சாலையில் ஒரு சுங்கச் சாவடி மட்டுமே உள்ளது. டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு 260 கி.மீ-க்கு 3 சுங்கச் சாவடிகள் மட்டுமே உள்ளன. ஆனால் தமிழகத்தில் செங்கல்பட்டிலிருந்து மீஞ்சூர் 60 கி.மீ-ல் 6 சுங்கச் சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளன. செங்கல்பட்டிலிருந்து மாதவரத்திற்கு 5 சுங்கச் சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளன. தமிழகத்தின் உள்ள லாரி உரிமையாளர்கள் தொழில் செய்வது கடினமாக உள்ளது.

மேலும் சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் நீக்க வேண்டும். வண்டலூர் டூ மீஞ்சூர் உள்வட்ட மாநில நெடுஞ்சாலையிலுள்ள வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவேடு, மிஞ்சூர் சுங்கச் சாவடிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூர் வாகனங்களுக்கு 50% சதவீதம் சுங்க வரியை குறைத்து தர வேண்டும். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகள் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சதவீதம் சுங்க வரியை குறைக்க வேண்டும். லாரி தொழிலை பாதுகாக்க விரைவில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கை மனுவை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் காலாவதியான 26 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CM ,Chennai ,Tamil Nadu Sand Truck Owners Association ,President ,R. Munirathanam ,Chief Minister ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...