சென்னை: பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஜமாக்கும் நோக்கத்தில் பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் இயக்குநர் வெற்றிமாறனால் 2022ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாமாண்டு துவக்க விழாவையொட்டி இளங்கலை திரைப்படக் கல்வியும் (B.Sc Film Studies) மற்றும் ஓராண்டு முதுகலை திரைப்பட இயக்க பட்டய படிப்பும் (PG Diploma in Film Direction) துவங்கப்பட்டன.
இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘இந்த நிறுவனத்தின் பயணத்தில் என்னை சேர்த்துக் கொண்ட வெற்றிமாறன் உள்பட அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்பு பேசிய மாணவர்கள் பேச்சின் மூலம் இங்கு கிடைக்கும் கல்வியின் மூலம் அவர்களுக்கு அரசியல் தெளிவு சிறப்பாக இருப்பதை உணர்ந்தேன். அது அவசியம் தேவை. உங்களுக்கு கிடைக்கும் அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது பலமடங்கு அதிகமாகும். எப்போதும் கற்றுக் கொள்ள தயாராக இருங்கள்’ என்றார்.
வெற்றிமாறன் பேசும்போது, ‘மாணவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக இந்நிறுவனம் துவங்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு துறைதான் என்றில்லாமல் பல்வேறு தளங்களிலும் மாணவர்கள் பயணிக்க வேண்டும்’ என்றார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஆர்த்தி வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post மாணவர்களுக்கு அரசியல் அறிவு அவசியம்: விஜய் சேதுபதி பேச்சு appeared first on Dinakaran.