×
Saravana Stores

ஆன்லைன் சூதாட்டத்தில் ₹2 கோடி இழப்பு; கால்வாயில் குதித்து வாலிபர் தற்கொலை

திருமலை: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா நகரை சேர்ந்தவர் சோமய்யா, மளிகை வியாபாரி. இவரது மகன்கள் சாய்குமார் (28), சந்தோஷ் (26). இருவரும் பட்டப்படிப்பு முடித்த நிலையில் தங்களது தந்தைக்கு உதவியாக மளிகை கடையில் வேலை செய்து வருகின்றனர். சாய்குமார் வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி ஆன்லைன் சூதாட்டம் ஆடியுள்ளார். ஆரம்பத்தில் பல ஆயிரம் சம்பாதித்தாராம். பின்னர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். தனது நண்பர்கள் மற்றும் வெளிநபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி சூதாடியுள்ளார். கடந்த 6 மாதங்களில் ₹2 கோடி வரை அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் வட்டி கேட்டு டார்ச்சர் செய்ததால் மன உளைச்சல் அடைந்தார் சாய்குமார். தனக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார். கடந்த 14ம் தேதி திடீரென சாய்குமார் மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கடந்த 19ம் தேதி நல்கொண்டா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஆய்வு செய்தபோது, ஹாலியா சோதனைச்சாவடி அருகே உள்ள நாகார்ஜூனா சாகர் அணையின் கால்வாய் பகுதி அருகே சாய்குமாரின் செல்போன் சிக்னல் காட்டியது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது சாய்குமாரின் பைக் மற்றும் செல்போன் இருந்தது. அந்த செல்போனை பார்த்தபோது செல்போனை நேர் கோணத்தில் வைத்து வீடியோ பதிவு செய்யும் வகையில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் செல்போனை ஆய்வு செய்தபோது சாய்குமார் லைவ் வீடியோ எடுத்தபடி அணையின் கால்வாயில் குதித்து தற்கொலை செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது. மேலும் உருக்கமான வீடியோவும் இருந்தது. பின்னர் நடத்திய தீவிர விசாரணையில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக ₹2 கோடி கடன் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

இதனிடையே சூர்யாபேட்டை மாவட்டம் பென்பஹாட் மண்டலத்தில் உள்ள தோசபஹாட் அருகே சாய்குமாரின் சடலம் கரை ஒதுங்கியிருந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

உருக்கமான வீடியோ வைரல்
சாய்குமாரின் செல்போனில் இருந்த வீடியோவை கைப்பற்றி பார்த்தபோது தனது பெற்றோருக்காக அவர் உருக்கமாக பேசியிருந்தார். அதில், அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தீர்கள். அந்த நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. `மிஸ் யூ ஆல்’ என அழுதபடி செல்பி வீடியோ இருந்தது. 2வது வீடியோவில் அவர் செல்போனை பக்கவாட்டில் வைத்துவிட்டு கால்வாயில் குதித்து தற்கொலை செய்யும் `செல்பி’ வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் இணைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஆன்லைன் சூதாட்டத்தில் ₹2 கோடி இழப்பு; கால்வாயில் குதித்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Somayya ,Nalgonda city, Telangana ,Saikumar ,Santosh ,Saykumar ,
× RELATED திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்