பர்கூர்: வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
என்.சி.சி. முகாம் நடத்திய சிவராமனை போலீசார் கைது செய்தனர். முகாம் நடத்த உடந்தையாக இருந்ததாகவும், சிவராமன் செய்த பாதக செயலை மறைக்க துணை போனதாகவும் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் சிவராமனின் கூட்டாளிகள் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிவராமன் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.
சிவராமன் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு நில பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரிடம் இருந்து 36 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. போலியாக நீதிமன்ற உத்தரவை தயார் செய்தும், நீதிமன்றத்தின் பெயரில் வங்கியில் கணக்கு இருப்பது போல் போலி ரசீது தயார் செய்தும் 36.20 லட்சம் மோசடியாக வசூலித்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உரிய ஆதாரங்களுடன் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
The post கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மீது 36 லட்சம் மோசடியாக வசூலித்ததாக மேலும் ஒரு புகார்.! appeared first on Dinakaran.