×

விவசாய பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்

ஈரோடு : ஈரோட்டில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், பயிர் சாகுபடி மற்றும் அறுவடை பணிகளில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் வேளாண்நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில், கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்த பகுதிகளில் சாகுபடி மற்றும் அறுவடை பணிகளை மேற்கொள்ள ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து விவசாய தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு வந்ததனர். தற்போது, தமிழகத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கட்டுமானம் மற்றும் பிற துறை சார்ந்த தொழில்களில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை போல, சமீப காலமாக தமிழகத்தில் விவசாய பணியிலும் வட மாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் முதல் போக வேளாண் சாகுபடி பணியில் மேற்கு வங்க இளைஞர்கள் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஈரோடு வைராபளையம் காலிங்கராயன் பாசன பகுதிகளில் விவசாய நிலங்களில் நெல் நடவு பணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 15க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது: ‘‘நெல் நடவு, கரும்பு வெட்டும் பணிகளுக்கு கடந்த ஆண்டு வரை உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் மூலம் மேற்கொண்டோம். கடந்த சில ஆண்டுகளாக விவசாய தொழிலாளர்கள் அனைவரும் அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று விடுவதால் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும், நமது விவசாய தொழிலாளர்கள் ஒரு ஏக்கருக்கு நடவு மற்றும் அறுவடை பணிகளுக்கு ரூ.5,500 வரை கூலி கேட்கின்றனர்.

ஆனால், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களும், வட மாநில தொழிலாளர்களும் ஏக்கருக்கு ரூ.4,500 வரை கேட்கின்றனர். மேலும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களும், வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் மாநிலத்தில் விவசாய தொழில் செய்து வருவதால், நம்ம தொழிலாளர்களை விட, அவர்களது நடவு மற்றும் அறுவடை பணிகள் நேர்த்தியாகவும், விரைவாகவும் செய்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் விவசாய பணியில் மட்டும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post விவசாய பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Erode ,West Bengal ,Bhavanisagar dam ,Dinakaran ,
× RELATED ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை:: மம்தா கேலி