×

குரங்கம்மைக்கு தடுப்பூசி தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்: ஓராண்டுக்குள் நல்ல செய்தி வரும் என அதார் பூனாவல்லா நம்பிக்கை

மும்பை: குரங்கம்மை தொற்றுக்கு சீரம் இந்தியா நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கிறது. கொரோனா தொற்றை தொடர்ந்து உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து இந்த தொற்றை, உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணியருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ​​நாட்டில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா; ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரை காக்க, குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில், நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம்.

ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2019 இறுதியில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிய போது இந்தத் தொற்றுக்கான, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை, சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post குரங்கம்மைக்கு தடுப்பூசி தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்: ஓராண்டுக்குள் நல்ல செய்தி வரும் என அதார் பூனாவல்லா நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Serum India Company ,Adhar Poonawalla ,MUMBAI ,monkeypox ,Dinakaran ,
× RELATED கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை