- அண்ணாமலை
- அஇஅதிமுக
- பல்லடம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- ஜனாதிபதி
- நிலை
- திருப்பூர் மாவட்டம்
- தின மலர்
பல்லடம்: கலைஞருக்கு கும்பிடு போடுவது தவறில்லை, ஒருவரது காலில் விழுவதுதான் தவறு என்று அதிமுகவுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும், கருணாநிதி சிலைக்கு அண்ணாமலை கும்பிடு போட்டு நிற்பதை பார்த்தால் தமிழக மக்கள் என்ன நினைப்பார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது:
கலைஞர் கருணாநிதி ஐயாவிற்கு கும்பிடு போடுவதில் தவறில்லை. காலில் விழுவது தான் தவறு. ஆர்.பி. உதயகுமாரின் சரித்திரத்தை நான் சொல்கிறேன். சசிகலா முன்பு ஆர்.பி.உதயகுமார் கைகட்டி வாய் பொத்தி மூன்றடி தள்ளி நிற்பார். பேசும்போது வார்த்தை அதிகமாக வரக்கூடாது என்பதால் அப்படி நிற்பார். 50 ஆண்டுகளாக அரசியல் வாழ்வில் இருந்த கலைஞருக்கும், பாஜவிற்கும் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் செய்திருக்கக்கூடிய பணிக்காக சாதாரண விவசாயி மகனான 40 வயது உடைய அண்ணாமலை அவரது நினைவிடத்திற்கு சென்று கும்பிடு போட்டு வணங்குவதை நான் பெருமையாகத்தான் கருதுகிறேன்.
எங்கள் கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் கலைஞர் 5 ஆண்டுகள் கூட்டணி அமைத்திருந்தார். இதே கலைஞர் தனது உடன்பிறப்புகளிடம், பாஜவை பற்றி தவறான கருத்துக்கள் தமிழகத்தில் பரப்பப்பட்டு வருகிறது. அதை நீங்கள் பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். 50 ஆண்டுகாலம் அரசியல் வாழ்விலும் 30 ஆண்டு காலம் திரைத்துறை வாழ்விலும் கலைஞர் தமிழ்நாட்டிற்கு பங்காற்றியுள்ளார். பல்வேறு விமர்சனங்களை நான் முன் வைத்தாலும் இதே போன்று அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் சென்று மரியாதை செலுத்தி உள்ளேன்.
அறிஞர் அண்ணாவுக்கும், பாஜவினருக்கும் கடவுள் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்திற்காக பணியாற்றிய தலைவர்களை மறக்கக்கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கும் நான் மரியாதை செய்வேன். தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதை எல்லாம் ஒரு குற்றமாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டாக முன் வைக்கிறார். நான் யார் காலிலும் விழவில்லை, கூனிக்குறுகி நிற்கவில்லை. கம்பீரமாக நடந்து சென்று 6 அடி இருக்கக்கூடிய நான், முதுகு வளையாமல் கலைஞர் சிலைக்கு வணக்கம் செலுத்தி விட்டு வந்திருக்கிறேன். அதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா மாநில அரசு நடத்திய விழா, ஒன்றிய அரசு பங்கேற்ற விழா. கலைஞர் நாணயத்துக்கு மாநில அரசு அனுமதி கோரியது. ஒன்றிய, மாநில அரசு விழாவாக அது நடந்தது. செலவினங்களை மாநில அரசு ஏற்றது. ஒன்றிய அரசு சார்பில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அவர் பாஜ சார்பில் கலந்து கொள்ளவில்லை. ஒன்றிய அமைச்சராக பங்கேற்றார். திமுகவை எதிர்க்கின்ற கட்சி பாஜதான். என்மீது போடப்பட்ட வழக்கை இதுவரை திமுக தரப்பில் வாபஸ் பெறவில்லை. பாஜ ஆளும் மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்க முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழக முதல்வர் அழைத்தால் செல்ல நானும் தயார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
* மாமன், மச்சான் கூட்டணி
அண்ணாமலை கூறும்போது, ‘‘அதிமுக, திமுக, பாஜ பங்காளிகள்தான். ஆனால் எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை. எங்கள் தலைமையில் கூட்டாட்சி அது மாமன் மச்சான் கூட்டணி. மாமன் மச்சான் கூட்டணி என்பது வேற்றுமையில் ஒற்றுமை’’ என்றார். மாமன் மச்சான் கூட்டணிக்கு விஜய் வந்தாலும் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘‘அவரும் மாமன் மச்சான்தான்’’ என அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
The post கலைஞருக்கு கும்பிடு போடுவது தவறில்லை ஒருவரது காலில் விழுவதுதான் தவறு: அதிமுகவுக்கு அண்ணாமலை பதிலடி appeared first on Dinakaran.