×

கடந்த 3 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து முடிக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை: சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில், பொதுப்பணித் துறையின் சென்னை மண்டலம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகள் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட பணிகள், பொதுப்பணித் துறை மற்றும் இதர துறையின் அறிவிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டங்களான, கலைஞர் மாநாட்டு மையம், புதுதில்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடம், வள்ளூவர் கோட்ட புனரமைப்புப் பணி, சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் யூனிட்டி மால் கட்டிடம் ஆகிய கட்டிடப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, குறித்த காலத்தில் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணிகளில் தாமதமின்றி குறித்த காலத்தில் பணிகள் முடிக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கான மதிப்பீடு தயாரித்தலில் பயன்பாட்டு துறையிடம் குறித்த நேரத்தில் கருத்துரு பெற்று தயாரித்தல் வேண்டும். கட்டிடம் கட்டுவதற்குமுன் மண் பரிசோதனை செய்து, மண் தன்மைக்கு ஏற்றவாறு கட்டிடங்கள் உறுதித் தன்மையுடன் கட்டப்பட வேண்டும்.

கட்டிடக் கலைஞர்கள் கட்டிட வரைபடங்கள் தயாரிக்கும் போது, கட்டிடங்களில் அமைக்கப்படும் கழிவுநீர் குழாய்கள் வெளியேறும் பகுதி, மின் அமைப்புகள் உள்ள பகுதிகளில் கான்கிரீட் போன்ற அமைப்புகள் குறுக்கீடு இல்லாமல் வடிவமைக்க வேண்டும். கட்டிடங்களில் நீர்க்கசிவு ஏற்படாத வண்ணம் தேவையான வாட்டர் ப்ரூப் நடைமுறைகளை அவசியம் பயன்படுத்த வேண்டும். எம்-சான்ட் சுவர் பூச்சு பயன்பாட்டிற்கு தேவையான கெமிக்கல் கலவையை பயன்படுத்த வேண்டும்.

மின் பொறியாளர்கள் அவ்வப்போது மின் அமைப்புகளை ஆய்வு செய்து மின் கசிவு ஏதும் ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, சிறப்புப் பணி அலுவலர் விஸ்வநாத், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கடந்த 3 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து முடிக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister AV Velu ,CHENNAI ,Minister ,Public Works ,Highways and Minor Ports ,AV Velu ,Chennai Zone ,Public Works Department ,Chepakkam Public Works Forum ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று...