வந்தவாசி, ஆக 21: வந்தவாசி அரசு மருத்துவமனையில் ₹5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தினை மண்டல ஆணையாளர் எஸ்.லட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வந்தவாசி அரசு மருத்துவமனையில் மாநில நகராட்சிகள் மூலமாக ₹5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியினை நகராட்சிகளின் வேலூர் மண்டல ஆணையாளர் எஸ்.லட்சுமி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாக இருக்கவும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ₹1.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர உள்ள மின் மயானத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதற்கான ஒயரிங் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் எச்சூர் கிராமத்தில் உள்ள குப்பை கிடங்குக்கு சென்று பார்வையிட்டு மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிக்கும் பணி சரியாக நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். புதிய பஸ் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள குப்பை பிரிக்கும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டு அங்கு மக்கும் குப்பை மக்காத குப்பை சரியாக பிரிக்காததால் துப்புரவு மேற்பார்வையாளர்களை கண்டித்தார். அப்போது அங்கு இருந்த கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் தினந்தோறும் தாமதமாக வருவதால் சுகாதாரப் பணி பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆய்வின்போது மேலாளர் ஜி.ரவி, பொறியாளர் கோபு, பணி மேற்பார்வையாளர் மணி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கணக்காளர் பிச்சாண்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
The post புதிய மருத்துவமனை கட்டிடத்தினை மண்டல ஆணையாளர் திடீர் ஆய்வு ₹5 கோடியில் கட்டப்பட்டு வரும் appeared first on Dinakaran.