- ராவுடி
- எஸ்.ஐ
- Susindram
- நாகர்கோவில்
- எஸ்ஐ
- செல்வமுருகன்
- மொரப்பநாடு வட்டாரம்
- தூத்துக்குடி மாவட்டம்
- ரவுடி
- தின மலர்
நாகர்கோவில்: எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு பகுதியை சேர்ந்தவர் செல்வ முருகன் என்ற தூத்துக்குடி செல்வம்(38). பிரபல ரவுடி. இவர் மீது 28 வழக்குகள் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகளும் அடங்கும். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய செல்வம் தற்போது வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஒரு இடத்தில் வசிக்காமல் பல்வேறு இடங்களில் தனது இருப்பிடத்தை மாற்றி மாற்றி வந்துள்ளார்.
தற்போது குமரி மாவட்டம் கருப்பாட்டூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்ற ஒருவரை செல்வம் மிரட்டி ரூ.2000 பறித்துள்ளார். பின்னர் அவரை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். புகாரின்படி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் ரவுடி செல்வத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சுசீந்திரம் அருகே தேரூர் நான்கு வழிச்சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் செல்வம் பதுக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
டிஎஸ்பி மகேஷ் குமார், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, அஞ்சுகிராமம் எஸ்ஐ லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்குள்ள குடிசையில் செல்வம் பதுங்கி இருந்தார். அவரை சரண் அடையும்படி எஸ்ஐ லிபி பால்ராஜ் கூறியுள்ளார். ஆனால் அவர் அரி வாளை காட்டி மிரட்டியதால் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை செய்தார். இதை தொடர்ந்து அவரை பிடிக்க சென்ற எஸ்ஐ லிபி பால்ராஜை அரிவாளால் ரவுடி செல்வம் வெட்டினார்.
தடுக்க முயன்ற அவருக்கு இடது கையில் பலத்த வெட்டு விழுந்தது. உடனே இன்ஸ்பெக்டர் ஆதம்அலி துப்பாக்கியால் ரவுடி செல்வத்தை நோக்கி சுட்டார். இதில் வலது கால் முட்டியில் குண்டு பாய்ந்து செல்வம் சரிந்து விழுந்தார். இதையடுத்து செல்வத்தையும், எஸ்ஐ லிபி பால்ராஜையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. எஸ்ஐ லிபி பால்ராஜ் கையில் 16 தையல் போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு எஸ்பி சுந்தரவதனம் வந்து எஸ்ஐ லிபி பால்ராஜிடம் விசாரித்தார்.
இந்த சம்பவத்தால் சுசீந்திரம் மற்றும் ஆசாரிப்பள்ளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
* 5 வழக்கில் பிடிவாரன்ட்
நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் செல்வம் மீது உள்ள கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததை தொடர்ந்து அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரல்வாய்ெமாழியில் 2018ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கு, தேரூரில் நடந்த இரட்டை கொலை வழக்கிலும் செல்வத்துக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து எஸ்பி சுந்தரவதனம் கூறுகையில், செல்வம் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் ஏ பிளஸ் வகை சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 28 குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 6 கொலை வழக்குகளும், 7 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். மேலும் இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 5 நீதிமன்ற பிடிவாரன்ட்கள் நிலுவையில் உள்ளது என்றார்.
The post சுசீந்திரம் அருகே குடிசையில் சுற்றிவளைப்பு எஸ்ஐயை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு: காலில் குண்டு காயத்துடன் பிடித்து சிகிச்சை appeared first on Dinakaran.