மாமல்லபுரம்: மாமல்லபுரம்-கோவளம் சாலையில் நிறுத்தப்படும் மினி லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வருபவர்கள் ஏராளமானோர் இசிஆர் சாலை வழியாக மாமல்லபுரம் நுழைவு வாயில் வந்து, அங்கிருந்து கோவளம் சாலை வழியாக நகருக்குள்ளே வருகின்றனர். குறிப்பாக, கோவளம் சாலை எப்போதுமே தனியார் பேருந்து, அரசுப் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்த, கோவளம் சாலையையொட்டி தினமும் மினி லாரி, கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நகர முடியாமல் பல மணி நேரம் காத்திருக்கின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகள் தினமும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், இந்த சாலையை கடந்து செல்லும் பள்ளி – கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து நெரிசலால் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். மேலும், சாலையையொட்டி உள்ள சில மெக்கானிக் கடைகளில் வாட்டர் சர்வீஸ் செய்யும்போது, அவ்வழியே பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மீது தண்ணீர் படுவதால் அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது. வாட்டர் சர்வீஸ் செய்யும்போது வெளியேறும் தண்ணீர் பாதாள சாக்கடைக்குச் சென்று, கழிவுநீருடன் கலந்து மேனுவல் மூடி வழியாக பொங்கி வெளியேறி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்நிலையில், ஞாயிறுக்கிழமை காய்கறி வாங்க மார்கெட்டுக்குச் செல்பவர்கள், தேவாலயத்துக்குச் செல்பவர்களும் அவதியடைகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் உடனடியாக தலையிட்டு கோவளம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் மினி லாரிகளை அப்புறப்படுத்தி, நிரந்தரமாக மினி லாரிகள் நிறுத்தாத அளவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு
மாமல்லபுரம்-கோவளம் சாலையில் இயங்கும் சில மெக்கானிக் கடைகளில் பழைய வாகனங்களில் இருந்து எடுக்கப்படும் ஆயிலை, கண் மூடித்தனமாக சாலையோரம் ஊற்றி விடுகின்றனர். இதனால் நிலத்தின் நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அங்குள்ள, ஆதிதிராவிடர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தால் கூட அதில் கிடைக்கும் தண்ணீரும் ஆயில் கலந்து வருவதால், அதை பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆதிதிராவிடர் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post மாமல்லபுரம்-கோவளம் சாலையில் நிறுத்தப்படும் மினி லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்: சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அவதி appeared first on Dinakaran.