×
Saravana Stores

அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்துப் போராடி அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழித் தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் இருந்து வந்த தனியார் நிறுவன உயர் அலுவலர்களை அரசின் செயலாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகளாக நியமனம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தனியார் துறையில் சிறப்பாகச் செயல்படும் தலைமைச் செயல் அதிகாரிகளை, நேரடியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் என்ற பெயரில் கடந்த 2018ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதே திட்டத்தின் கீழ் புதிதாக மேலும் 45 பேரை நியமிக்க ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டம் அப்பட்டமான சட்ட மீறல் மட்டும் அல்ல, அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் கொடும் தாக்குதல் ஆகும்.

இதன் மூலம் அரசு நிர்வாகம் முழுமையாக ஆர்.எஸ்.ஸ். பிடியின் கீழ் செல்லும் வகையில் பாதை அமைக்கும் சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.

ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கிய பதவிகளில் லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்பு மூலம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு வெளிப்படையாகப் பறிக்கிறது;

நாட்டின் உயர்மட்ட அதிகாரம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து கூறி வருகிறேன். இதனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, லேட்டரல் என்ட்ரி மூலம் பட்டியலினத்தைச் சேர்ந்தோர் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள்.

இந்தச் செயல் யு.பிஎஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். மேலும் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதியின் மீது ஒன்றிய அரசு தொடுத்துள்ள தாக்குதலாகும்” என்று காங்கிரஸ் கட்சி முன்னணித் தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சுட்டிக் காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது ஆகும்.

இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்துப் போராடி அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

The post அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,CHENNAI ,India ,RSS ,Madhyamik ,General Secretary ,BJP government ,Modi ,RSSize ,Dinakaran ,
× RELATED மருத்துவமனையில் வைகோ திடீர் அனுமதி