×
Saravana Stores

இளவரசியை ரசிக்க… இ-பாஸ் எல்லாம் ஒரு தடையா? காலையில் வெயில், பகலில் சாரல், இரவில் குளிர்: காலநிலை மாறி, மாறி கலக்குது கொடைக்கானல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும் விடுமுறை கொண்டாட்டங்களுக்காக கடந்த 2 நாட்களாக அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும். தற்போது சுதந்திர தின நாள் தொடர் விடுமுறையையொட்டி, நேற்றும், நேற்று முன்தினமும் கொடைக்கானலுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதில் தூண் பாறை பகுதியில் வனத்துறையினர் வைத்துள்ள தத்ரூப யானை சிலைகள் முன்பு நின்று ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டனர். பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களையும், கண்ணாடி மாளிகையில் உள்ள பல அபூர்வ தாவர இனங்களையும் கண்டு ரசித்தனர்.

இதுபோல் ஏரியில் படகு சவாரி, ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் சென்று குதூகலித்தனர். தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளிலும் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து ரசித்தனர். கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக காலையில் வெயில், நண்பகலில் சாரல் மழை, மாலையில் குளிர் என சூழல் மாறி மாறி இருந்து வருகிறது. இந்த மாறுபட்ட சூழலை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்து சென்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஒரு சில இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும் கொடைக்கானலுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் சுற்றுலாத் தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

The post இளவரசியை ரசிக்க… இ-பாஸ் எல்லாம் ஒரு தடையா? காலையில் வெயில், பகலில் சாரல், இரவில் குளிர்: காலநிலை மாறி, மாறி கலக்குது கொடைக்கானல் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Princess of the Hills' ,Dindigul district ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் வனப்பகுதியில் அழுகிய...