×
Saravana Stores

ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 118 அடியாக உயர்வு: கடல்போல் ததும்பும் தண்ணீர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால் ஆழியார் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 118 அடிக்கு மேல் உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் சோலையார், பரம்பிக்குளம், ஆழியார், திருமூர்த்தி ஆகிய அணைகள் மிக முக்கியமானதாகும். இதில் ஆழியார் அணைக்கு சர்க்கார்பதி, நவமலை நீர் மின்நிலைய பகுதியிலிருந்தும் நீரோடை வழியாகவும் தண்ணீர் அதிகளவு வருகிறது. இங்கிருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததால், ஆழியார் அணையின் நீர் மட்டம் விரைந்து உயர்ந்துள்ளது. 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் பல மாதங்களாக 80 அடிக்கும் குறைவாக இருந்தது. அண்மையில் பெய்த கோடை மழையால், கடந்த 2 வாரத்துக்கு முன்பு அணை முழு அடியை எட்டியதுடன், பிரதான மதகுகள் வழியாக அவ்வப்போது உபரி நீர் திறப்பு இருந்தது.தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் நேற்றும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 118 அடிக்கு மேல் இருந்தது.

ஆழியார் அணையின் நீர்மட்டம் சுமார் 2 வாரத்துக்கு மேலாக 118 அடிக்கும் மேல் உள்ளதால், கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் ஆழியாருக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும், அணையின் மேல்பகுதியில், அணையின் அழகை ரசிப்பதுடன், கடல்போல் ததும்பும் தண்ணீரை கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். ஆழியார் அணைக்கு தற்போது வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 450 கன அடி வீதம் பாசன பகுதிக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறப்பு இருந்தாலும், மலைமுகடுகளிலிருந்து வரும் தண்ணீரை பாசனத்திற்காக தொடர்ந்து சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

The post ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 118 அடியாக உயர்வு: கடல்போல் ததும்பும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Aliyar Dam ,Pollachi ,Aliyar ,Cholaiyar ,Parambikulam ,Thirumurthy ,Azhiyar ,Coimbatore district ,
× RELATED தொடர் விடுமுறை 4 நாட்களில் ஆழியார், கவியருவிக்கு 35,000 பேர் வருகை