ஊட்டி, ஆக. 19: நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனங்களில் சிறுத்தை, புலி, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லை. இதனால், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகின்றன. ஊட்டி அருகேயுள்ள நுந்தளா கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் கரடி நடமாடி வருகிறது.
கரடி நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மேலும், கரடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் கதவை திறக்க முயற்சித்தது. கரடி வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட்டவுடன் அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் கரடி நடமாடுவதை அப்பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
தற்போது, கரடி நடமாடும் வீடியோ வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நுந்தளா கிராமத்தில் கரடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் வீட்டின் கதவுகளை உடைத்து வீட்டிற்குள் வர முயற்சிக்கிறது. நாங்கள் சத்தம் போட்டவுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் பல முறை தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர். குடியிருப்பு பகுதிக்குள் கரடி நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
The post ஊட்டி அருகே இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி appeared first on Dinakaran.