×
Saravana Stores

பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் போக்குவரத்து சீரானது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால், கடற்கரை-தாம்பரம் இடையே ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் தினசரி ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அனைத்தும் தாம்பரம் வழியாக எழும்பூர் வரை இயக்கப்படுகின்றன.

இதனால் தாம்பரம் ரயில் நிலையம் என்பது முக்கிய முனையமாக உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தாம்பரம் பணிமனையில் கடந்த மாதம் 23ம் தேதி பராமரிப்பு பணி தொடங்கியது.

இதன் காரணமாக, சென்னை தாம்பரம் வழியாக வரும் ரயில்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்தது. இதனால், பயணிகள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் தாம்பரத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்று முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தாம்பரம் ரயில் நிலையத்தில் யார்டு பராமரிப்பு பணிகள் முதலில் கடந்த 14ம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதற்கு தகுந்த மாதிரி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் பராமரிப்பு பணியை முழுவதுமாக முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டது. இதன் காரணமாக கூடுதாக மேலும் 4 நாட்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை மின்சார ரயில் ரத்து நீட்டிக்கப்பட்டது.

இதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் 59 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதேபோன்று, பயணிகளின் வசதிக்காக குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தாம்பரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்றுடன் தாம்பரம் யார்டு பணிகள் நிறைவடைந்தது. இதனால் இன்று முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கம் போல் இயங்கும் மின்சார ரயில் சேவைகள் இயங்கும்.

இதன்மூலம், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து சீரானது. தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பணி நிறைவடைந்து மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல நின்று செல்லும், அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது,’’ என்றார்.

The post பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் போக்குவரத்து சீரானது: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coastal-Tambaram ,Southern Railway ,CHENNAI ,Chennai Coast – Tambaram ,Chengalpattu route ,Coastal ,Tambaram ,Dinakaran ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...