×

யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட 35 தனியார் காட்டேஜ்களை இடித்து அகற்ற நோட்டீஸ்: மாவட்ட நிர்வாகம் அதிரடி

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள 35 தனியார் காட்டேஜ்களை 15 நாட்களுக்குள் இடித்து அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், முதுமலை, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட யானைகள் வழித்தட பகுதிகளில் அமைக்கப்பட்ட 309 அறைகள் கொண்ட 39 கட்டிடங்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

இதையடுத்து 14-10-2020ல் சீகூர் யானைகள் வழித்தடம் தொடர்பாக ஆராய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கடராமன் தலைமையில் பிரவீன் பார்கவா, நந்தித்தா ஹாசரிக்கா 3 நபர் விசாரணைக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குழுவிடம் 2020 டிசம்பர் முதல் 2021 பிப்ரவரி 14 வரை ரிசார்ட் உரிமையாளர்கள், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பலர் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தனர். குழுவின் விசாரணை முடிந்த நிலையில் தனியார் காட்டேஜ்கள் குடியிருப்புக்கான உரிமம் பெற்று கட்டப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவற்றை இடிக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இக்குழுவின் உத்தரவுப்படி தற்போது நீலகிரி மாவட்ட நிர்வாகம் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 11 காட்டேஜ் கட்டிடங்கள், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 20 காட்டேஜ்கள் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ள 35 காட்டேஜ்களை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்றுமாறு உத்தரவிட்டு பதிவு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் இடித்து அகற்றாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகமே இடித்து அகற்றும். அதற்கான செலவு தொகை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட 35 தனியார் காட்டேஜ்களை இடித்து அகற்ற நோட்டீஸ்: மாவட்ட நிர்வாகம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : District administration ,Ooty ,Mudumalai Tiger Reserve, Masinagudi ,Nilgiris District ,Mayar Valley ,Sigur Valley ,Dinakaran ,
× RELATED விபத்தில் கால்கள் உடைந்த நிலையில்...