×
Saravana Stores

முதல்வரின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் காந்தாரி போல கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி: ஆ.ராசா அறிக்கை

சென்னை: கலைஞரை இந்திய ஒன்றியமே கொண்டாடுவதையும், முதல்வரின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமலும் காந்தாரி போல எடப்பாடி பழனிசாமி கதறுகிறார் என ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா வெளியிட்ட டிவிட்டர் பதிவு: கலைஞரின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு.

கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அதிமுக.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும் கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை, கலைஞர் நாணயத்தில்தான் ‘தமிழ் வெல்லும்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது எனப் புரியவில்லை.

எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பா.ஜ. தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா.

உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் ஒன்றிய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ. அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.

பா.ஜ.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அ.தி.மு.க.வையே அழித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, தி.மு.க. மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள். அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972ம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்த முனைந்தவர் கலைஞர்.

அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள். முதல்வர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கலைஞரை இந்திய ஒன்றியமே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post முதல்வரின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் காந்தாரி போல கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி: ஆ.ராசா அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Gandhi ,RAZA ,Chennai ,Union of India ,Deputy Secretary General ,H.E. ,Twitter ,Khatarya ,Eadapadi Palanisami ,Rasa ,Dinakaran ,
× RELATED ஒத்த கருத்துடைய கட்சியுடன் அதிமுக...